DK Shivakumar: ‘கனகாபுரா தொகுதியில் அமோக வெற்றி’... கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த டி.கே.சிவக்குமார்..!
Karnataka Election Result 2023: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.ஷிவகுமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி 224 தொகுதிகளுக்குமான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடித்தது. இதனைத் தொடந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.
இதில் தொடக்க முதலே காங்கிரஸ் கட்சி, பாஜகவை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறது. ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி தேவை என்ற நிலையில் தேவைக்கு அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. தேர்தல் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த நிலையில், அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை உடனடியாக பெங்களூரு வருமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைவர் டி.கே.சிவக்குமார்
இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள கனகபுரா தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் நாகராஜூ, பாஜக சார்பில் ஆர் அசோகா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சிவக்குமார் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை சிவக்குமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதால் அவரது வெற்றி உறுதியாகி விட்டது. இது மொத்த வாக்கு எண்ணிக்கையில் 72% ஆகும். அவருக்கு கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சிவக்குமார்
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார், “கண்ணீர் மல்க காங்கிரஸ் தலைவர்களுக்கு, தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார். கர்நாடகா தேர்தல் வெற்றி அனைத்து காங்கிரஸ் தலைமையே சேரும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.