ஹிஜாப் தடை விவகாரம்: முக்கிய பங்கு வகித்த கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் படுதோல்வி...!
கர்நாடக சட்டபேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட பி.சி நாகேஷ் 16000 வாக்கு வித்தியாசத்தில் பிந்தங்கியுள்ளார்.
கர்நாடக மாநிலத் சட்டமன்றத் தேர்தலில் திப்துர் தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை அமைச்சர் பி.சி நாகேஷ் காங்கிரஸ் வேட்பாளர் ஷதாக்ஷாரியை விட 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். இந்த கடந்த 2021 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஹிஜாப் தடை பி.சி நாகேஷின் இந்தத் தோல்விக்கு எந்த வகையில் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
ஹிஜாப் அணிய தடை:
கடந்த 2021 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உருவெடுத்த மிகப்பெரிய பிரச்சனை என்றால் ஹிஜாப் அணிவது குறித்து உருவான பிரச்சனையே ஆகும். உடுப்பியில் உள்ள அரசு பியு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இநிநிலையில் கல்வி நிலையங்களில் பள்ளி சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும் மதத்தை குறிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது என்றும் அரசு தரப்பில் இருந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த உத்தரவை முன்னிறுத்தி பள்ளி மற்றும் கல்லூரிகள் ஹிஜாப் அணிந்து வந்த மாணவர்களை அனுமதிக்க மறுத்தன.
அரசு மற்றும் கல்வி நிலையங்களின் இந்த செயல்பாடுகள் பல்வேறு மாணவ போராட்டங்களால் எதிர்க்கப்பட்டன. கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டம் செய்தனர். அதே நேரத்தில் இந்த போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவித் துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு சென்றார்கள்.கடைசியில் ஹிஜாப் அணிந்துவந்த பெண்களை அனுமதிக்க மறுத்துவிட்டன கல்வி நிலையங்கள்.
கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஹிஜாப் மீதான தடையை நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு அரசுக்கு சாதகமானதாவே அமைந்தது. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிய அனுமதி வழங்கக்கோரி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவேறு கருத்துகளை கூறியதால் ஒரு தீர்மானமான முடிவிற்கு வராமல் ஹிஜாப் தடை கர்நாடாகாவில் நீடித்துவந்தது
கர்நாடக கல்வித்துறை அமைச்சர்:
இந்த மொத்த நிகழ்விலும் கர்நாடக கல்வித் துறை அமைச்சராக இருந்த பி.சி நாகேஷின் பங்கு குறிப்பிடத்தகுந்தது.முதலில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்துவர தடைவிதிக்கப்பட்டது. பின்பு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்தார் நாகேஷ்.
மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த சூழலில் இந்த போராட்டங்களுக்குப்பின் மதவாத சக்திகளின் தூண்டுதல் இருப்பதாக கூறினார் நாகேஷ். மேலும் பாடப் புத்தகங்களில் திப்பு சுல்தான், பெரியார் ஆகிய தலைவர்களின் பகுதிகளை நீக்கி சாவர்க்கர் போன்ற ஆர்,எஸ்,எஸ் தலைவர்களின் பாடங்களை சேர்க்கப்பட்டது பி.சி நாகேஷின் தலைமயின் கீழ்தான். ஹிஜாப் பிரச்சனையில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவளித்த காங்கிரஸிற்கு இஸ்லாமியர்களின் வாக்குதான் முக்கியம் என்று குற்றம் சாட்டினார் பி.சி நாகேஷ்.