Jharkhand Exit Poll 2024: ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி ஆட்சி - கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!
Jharkhand Election Exit Poll Results 2024: சி.என்.என், பி.மார்க் கருத்துக்கணிப்பின் படி, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணிக்கு 47 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறுகிறது.
ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 42 முதல் 48 இடங்கள் வரை கிடைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. மேலும், ஜே.எம்.எம் கூட்டணிக்கு 32 லிருந்து 37 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிகிறது.
சி.என்.என், பி.மார்க் கருத்துக்கணிப்பின் படி, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணிக்கு 47 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறுகிறது. இந்தியா கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்டில் வாக்குப்பதிவு முடிந்ததும், முதல்வர் ஹேமந்த் சோரன், அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்த மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "புனித பூமியான ஜார்க்கண்டில் நடைபெறும் இந்த ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழா அற்புதமாக இருந்தது. இரண்டு கட்டங்களிலும் மாநில மக்கள் தங்கள் விருப்பங்களையும் நம்பிக்கைகளையும் வாக்களிப்பதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இது தேர்தல் மட்டுமல்ல, புதிய, செழுமையும் கொண்ட ஒரு தீர்மானம்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், "அழியாத துணிச்சலான தியாகிகளின் தியாகத்தை நனவாக்குவோம், மாபெரும் புரட்சியாளர்களின் கனவுகளை நிறைவேற்றுவோம், போராட்டக்காரர்களின் நம்பிக்கைக்கு உறுதியான வடிவம் கொடுப்போம், ஒன்றாக இணைந்து புதிய, தங்க ஜார்க்கண்டை உருவாக்குவோம்" என்று கூறினார்.
"இந்த நல்ல சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு வாக்காளருக்கும், வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கும், ஜே.எம்.எம் மற்றும் இந்திய கூட்டணியின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்திய அனைத்து அரசியல் கட்சிகளின் ஊழியர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். ஜார்கண்ட் வெற்றிபெறும்" என அவர் கூறினார்.