Haryana J&K Election: கருத்து கணிப்புகள் ஃபெயில் - ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி, ஜம்மு&காஷ்மீரில் கொடி நாட்டிய காங்கிரஸ்
Haryana J&K Election: ஹரியானா மற்றும் ஜம்மு &காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளை பொய்த்துபோக செய்துள்ளன.
Haryana J&K Election: ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற உள்ள நிலையில், ஜாம்மு & காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது.
ஹரியானா - பாஜக ஹாட்ரிக் வெற்றி
ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி பாஜக அங்கு 48 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதாவது பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை காட்டிலும், பாஜக கூடுதல் இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 36 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ் சுமார் 60 தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில், தற்போது கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் பெரும்பாலானவை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஹரியானாவில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தன. ஆனால், அவற்றை பொய்யாக்கி, பாஜக ஹாட்ரிக் வெற்றியை சுவைத்து ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியின் மீதான அதிருப்தி மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக பாஜகவின் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு என கூறப்பட்டது. ஆனால், அவை அனைத்தயும் தவிடுபொடியாக்கி பாஜக முன்னிலை பெற்று இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் காங்கிரஸ் அதகளம்:
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தல் மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் போன்ற காரணங்களால், ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவாகியுள்ள வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பகட்டத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நிலவியது. இருப்பினும், பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 51 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது பெரும்பான்மைக்கு தேவையானதை காட்டிலும் கூடுதல் இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி முனைப்பில் உள்ளனர்.
பாஜக வெறும் 28 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், ஜம்மு & காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் அல்லது தொங்கு சட்டசபை அமையலாம் என தெரிவித்து இருந்தன. அதன்படி, காங்கிரஸ் கூட்டணி ஜம்மு & காஷ்மீரில் ஆட்சியை பிடிக்கிறது.
இன்று மாலைக்குள் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.