கரூரில் மாட்டு வண்டி ஓட்டி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்
தண்ணீர் திறந்து விட கேட்கல, தொகுதிக்குள்ள வராமல் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொள்கிறார் ஜோதிமணி.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மாட்டு வண்டி ஓட்டி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தங்கவேல் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதி முழுவதும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலப்பாளையம், விசுவநாதபுரி, பள்ளப்பாளையம், பெளத்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பிரச்சார வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார். முன்னதாக வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், பொன்னாடை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
விஸ்வநாதபுரியில் வேட்பாளர் தங்கவேலுடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாட்டு வண்டி ஓட்டி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”ஜோதிமணிக்கு கை சின்னத்தில் போடுற ஓட்டும், நோட்டாவுக்கு போடுற ஓட்டும் ஒன்னுதான். ஜோதிமணி நமக்கு தண்ணீர் கொடுக்காத கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரும் ஒரே கட்சிதான். தண்ணீர் திறந்து விட கேட்கல, தொகுதிக்குள்ள வராமல் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொள்கிறார் என கூறி அதற்கான புகைப்படங்களை வாக்காளர்களிடம் காண்பித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.