பரபரக்கும் ஈரோடு இடைத்தேர்தல்! வெற்றி யாருக்கு? தொடங்கியது வாக்குப்பதிவு
காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 2600 காவல் துறையினர் உட்பட 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்காக 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏவாக இருந்தார். அவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிடுவதாக அறிவித்தார். அதன்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். இதைத்தொடர்ந்து இவரும் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து காலியான சட்டமன்றத் தொகுதியில் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தல் களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலகுவதாக அறிவித்துள்ளன. புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை புறக்கணித்துள்ளது.
தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நேற்றைய முன் தினம் முதல் இன்று வரை 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இதுவரை ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் திமுகவே கைப்பற்றியுள்ளது. திமுக சார்பில் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் களம் காண்கின்றனர். வெற்றி யாருக்கு என்பது 8ஆம் தேதி எண்ணப்படும் வாக்குகள் முடிவில் தெரியவரும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

