Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 56 பேர் வேட்புமனு - இன்று பரிசீலனை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உடனடியான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நிலையில், இதனுடன் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் மட்டுமே இடைத்தேர்தல் நடந்தது. இதனிடையே ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது.
அடுத்த சில நாட்களில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உடனடியான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் கடந்த 21 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்தது.
அதேசமயம் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுகின்றனர். மும்முனை போட்டி நிலவுவதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. அதேசமயம் இந்த இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், சுயேட்சையாக 40 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பதால் அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
இப்படியான நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 275 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இந்த மையங்களில் பணியாற்றக்கூடிய 1,335 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நேற்று லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதற்கட்ட பயிற்சி நடந்தது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தேர்தல் பறக்கும்படையினர், கண்காணிப்பு குழு 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.