Sankarankovil:15 ஆண்டுகளுக்கு பின் அதிமுகவிடமிருந்து சங்கரன்கோவில் நகராட்சியை கைப்பற்றியது திமுக
திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் வெற்றி பெற்றார். இதனால் அதிமுக வசமிருந்த சங்கரன்கோவில் நகராட்சி 15 ஆண்டுகள் பின் குலுக்கல் முறையில் திமுக வசமானது.
தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் மாநகராட்சி மேயர், நகர் மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வந்தது. நடந்து முடிந்த நகர்மன்ற உறுப்பினர் தேர்தலில் சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் அதிமுக 12, திமுக 9, மதிமுக 2, காங்கிரஸ் 1, எஸ்டிபிஐ 1, சுயேட்சை 5 என்ற நிலையில் வெற்றி பெற்றிருந்தனர். அதிமுக தனித்து போட்டியிட்டு 12 வார்டுகளையும், திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 12 வார்டுகளையும் கைப்பற்றியிருந்தது. மீதமுள்ள சுயேட்சை வேட்பாளர்களே வெற்றியை நிர்ணயிக்கும் இடத்தில் இருந்தனர்.
இதற்கிடையில் 5 சுயேட்சை வேட்பாளர்களும் திமுக மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், நகர்மன்ற தலைவர் வேட்பாளராக திமுக சார்பில் 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரியும், அதிமுக சார்பில் 4வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முத்து லட்சுமியும் போட்டியிட்டனர். இதையெடுத்து, திடீர் திருப்பமாக இருவரும் 15/15 என்ற சமமான வாக்குகளைப் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. குலுக்கலில் திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் வெற்றி பெற்றார். இதனால் அதிமுக வசமிருந்த சங்கரன்கோவில் நகராட்சி 15 ஆண்டுகள் பின் குலுக்கல் முறையில் திமுக வசமானது.
இதே போன்று 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் கோட்டையாக இருந்த சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியும், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வசமானது குறிப்பிடதக்கது. சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி வெற்றி பெற்றதால் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா திமுக தொண்டர்களுடன் நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களைக் கூறினார்.