Local Body Election | கோவையில் சாக்கடை சுத்தம் செய்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
துப்புரவு பணியாளர் சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்ததை பார்த்த, சிரவை சிவா திடீரென சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் சிறிது நேரம் ஈடுபட்டார்.
வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் திமுக சார்பில் சிரவை சிவா என்கிற பழனிசாமி போட்டியிடுகிறார். பி.இ பட்டதாரியான இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று சரவணம்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் இருந்த துப்புரவு பணியாளர் சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்ததை பார்த்த, சிரவை சிவா திடீரென சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் சிறிது நேரம் ஈடுபட்டார். பின்னர் ஒரு டீக்கடைக்கு சென்ற அவர், பலகாரம் சுட்டு அங்கிருந்த பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். மேலும் வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அவர் தான் வெற்றி பெற்றால் அப்பகுதியின் மக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் என கூறி வாக்குகளை சேகரித்தார்.
இதேபோல கோவை மாநகராட்சியின் 52 வது வார்டு திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று ஜெயவர்த்தனவேலு நகர், வேலப்பன் நாயுடு நகர், கொண்டசாமி நாயுடு லே அவுட், மேத்தா லே அவுட் பகுதிகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பகுதியில் அடிப்படை தேவைகள் மிகவும் மோசமாக உள்ளது எனவும், தான் வெற்றி பெற்றவுடன் அதை சரிசெய்து தருவேன் எனவும் கூறினார். மேலும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இப்பகுதியில் பாதாள சாக்கடைகளுக்கான இணைப்பு இதுவரை வரவில்லை எனவும், அதனை தான் வெற்றி பெற்றவுடன் சரிசெய்து தருவேன் எனவும் உறுதி அளித்தார். கொரனோ காலத்தில் இறந்தவர்களுக்கு உதவி தொகைh பெற்றுத்தருவேன் எனவும் இப்பகுதியில் இ-சேவை மையம் அமைத்து தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். இதேபோல அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.