தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும் - இயக்குநர் களஞ்சியம்
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படிக்காமல் ஒரு பாமரனைப்போல அண்ணாமலை பேசுகிறார் - இயக்குநர் களஞ்சியம்
விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்தவர்கள் எதிர்காலத்தில் வருத்தப்படுவார்கள். அவர்களுக்கு இந்த தேர்தல் பாடம் புகட்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் பேட்டி
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் களஞ்சியம் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் களஞ்சியம் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் இயக்குநர் களஞ்சியம் பேசியதாவது:
நாம் தமிழர் கட்சி தொடக்கத்தில் இருந்து சின்னத்துக்கு எதிரான கட்சி. சின்னம் முக்கியம் இல்ல கருத்து தான் முக்கியம். மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சி பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறிவிடும் என்ற அச்சம் எங்களுக்கு எதிர் தரப்பில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு வளர்ச்சி அடைந்த ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. மத்தியில் ஆட்சி செய்து வரும் கட்சிக்கும், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் கட்சிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்.ஐ.ஏ போன்ற மிரட்டல்களை முன் வைத்தார்கள். தற்போது சூழ்ச்சி செய்து எங்கள் சின்னத்தை பிடுங்கியுள்ளனர். உச்சநீதிமன்றம் வரை சென்று சின்னத்தை கேட்பதற்கு காரணம் எங்கள் கொள்கைக்கு நெருக்கமான சின்னமாக விவசாயி சின்னம் உள்ளது. சின்னம் இல்லாமல் நாம் தமிழர் தொண்டர்கள் மக்களை சந்திக்க முடியாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த ஈனத்தனமான செயலை செய்தார்களோ அவர்கள் எதிர்காலத்தில் வருத்தப்படுவார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டும்.
சின்னம் தொடர்பாக அண்ணாமலை கூறிய கருத்திற்கு பதில் அளித்த களஞ்சியம். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படிக்காமல் ஒரு பாமரனைப்போல அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலையின் கருத்திற்கு எங்களின் எக்ஸ் தளத்தில் விரிவான கருத்துக்களை பதிவு செய்துள்ளோம் அதை அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் கேட்ட தரவுகளை நாம் தமிழர் கட்சி கொடுத்துள்ளது இருப்பினும் தேர்தல் ஆணையம் விதி மீறி சின்னத்தை பறித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அண்ணாமலை படித்துவிட்டு பேச வேண்டும். இவ்வாறு கூறினார்.