Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஆந்திர சட்டமன்ற தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதிகளும், ஆந்திராவைச் சேர்ந்த 25 மக்களவை தொகுதிகளும் அடங்கும். அதோடு, ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இன்று ஆந்திர சட்டசபைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, ஜுன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.
ஜெகன் Vs சந்திரபாபு நாயுடு:
தற்போதய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக மற்றும் பவன் கல்யான் தலைமையிலான ஜனசேனா ஆகிய கட்சிகளும் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரப் பிரதேசம் பெரும்பாலும் மாநிலக் கட்சிகளான தெலுங்கு தேசம் (டிடிபி) மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையேயான போர்க்களமாகவே மாறியுள்ளது.
அங்கு கோலோச்சி வந்த காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய முதலமைச்சரான கெஜன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால், முந்தைய தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
பாஜக தடம் பதிக்குமா?
பாஜகவை பொறுத்தமட்டில் அக்கட்சிக்கு, ஆந்திராவில் வலுவான கட்டமைப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி வெறும் ஒரு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளில் அந்த கட்சி மாநிலத்தில் ஆற்றிய களப்பணி மற்றும் சந்திரபாபு நாயுடு உடனான கூட்டணியின் மூலம், இந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அதோடு, சட்டமன்ற மற்றும் மக்களவைக்கும் சில உறுப்பினர்களை பெறும் என கட்சி மேலிடம் வலுவாக நம்புகிறது.
தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்னைகள்:
வேலைவாய்ப்பின்மை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்தும் இல்லாதது, போன்ற பிரச்னைகளை முக்கியப்புள்ளிகளாக கொண்டு சந்திரபாபு நாயுடு கூட்டணி ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், பெண்கள், SC/ST சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் மூலம், வாக்குகளை கவர்ந்து ஆட்சியை தக்க வைக்க ஜெகன் மோகன் திட்டமிட்டுள்ளார்.
மாநில தேர்தல் வரலாறு:
2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. அதன்படி, சட்டமன்றத்த்ல் இந்த கூட்டணி 106 இடங்களையும், மக்களவை தொகுதிகளில் 17 இடங்களையும் கைப்பற்றின. தொடர்ந்து 2019ம் ஆண்டு தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. மக்களவை தேர்தலில் 50 சதவிகித வாக்குகளுடன் 22 இடங்களை வென்றது.