Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பூஜ் ஏஜெண்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பூஜ் ஏஜெண்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது.
பூத் ஏஜெண்டுகள் கடத்தல்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஓய்.எஸ். ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் தான், புங்கனூர் சட்டமன்ற தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 பூத் ஏஜெண்டுகள் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு:
புங்கனூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சதும் மண்டலத்தைச் சேர்ந்த போரகமண்டா பகுதியில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 15 பூத் ஏஜெண்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெத்திரெட்டி ராமச்சந்திரா ஆட்கள் கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்குப்பதிவு மையத்திற்கு சென்றபோது, 15 பேரும் அடித்து கட்டாயப்படுத்தி ஒரு வாகனத்திற்குள் ஏற்றி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெகன் மோகன் மற்றும் சந்திர பாபு நாயுடு இடையே, சட்டமன்ற தேர்தலில் நேரப்போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் பூத் ஏஜெண்டுகள் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் புகார்:
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெலுங்கு தேசம் கட்சி புகாரளித்துள்ளது. அதில், “ஆந்திராவில் புங்கனூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்பில் சமரசம் செய்யும் சம்பவங்கள் நடப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். புங்கனூர் தொகுதியில் 15 தெலுங்கு தேசம் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் சதும் மண்டல் போரகமண்டா கிராமத்தில் கடத்தப்பட்டனர். மேலும், தொகுதி முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடப்பதால் உடனடியாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட வேண்டும். அமைதியான வாக்குப்பதிவை மேற்கொள்ள இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கவும், இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெகன் Vs சந்திரபாபு நாயுடு:
தற்போதய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக மற்றும் பவன் கல்யான் தலைமையிலான ஜனசேனா ஆகிய கட்சிகளும் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரப் பிரதேசம் பெரும்பாலும் மாநிலக் கட்சிகளான தெலுங்கு தேசம் (டிடிபி) மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையேயான போர்க்களமாகவே மாறியுள்ளது. இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய முதலமைச்சரான கெஜன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது.