கோவை : ஜெயலலிதா வேடமணிந்த மகளுடன் வந்து அமமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்
நாஃபில்லா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேடத்தில் வர, சுற்றிலும், கருப்பு உடை அணிந்த சிறுவர்கள் பொம்மை துப்பாக்கிகளுடன் கண்ணாடி அணிந்தபடி கருப்பு பூனைப் படை பாதுகாப்பு போல வந்தனர்.
வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 28 ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுத் தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று ஏராளமானோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
கோவை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமான முறையில் வேட்பு மனுவை தாக்கல் செய்து கவனம் ஈர்க்க முயற்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மன்னர் வேடமணிந்து வருவது, பாரத மாதா வேடமணிந்து வருவது, தேசிய தலைவர்கள் வேடமணிந்தவர்களுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்வது போன்றவற்றை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை 90வது வார்டில் அமமுக சார்பில் நாபிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கோவை தெற்கு மண்டல அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்தார்.
அப்போது அவருடன் அவரது மகள் நாஃபில்லா என்பவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேடத்தில் கண்ணாடி, பச்சை நிற சேலையுடுத்தி வந்தார். அவரை சுற்றிலும், கருப்பு உடை அணிந்த சிறுவர்கள் பொம்மை துப்பாக்கிகளுடன், கண்களில் குளிர் கண்ணாடி அணிந்தபடி கருப்பு பூனைப் படை பாதுகாப்பு போல வந்தனர். சிறுவர்களும் தத்ரூபமாக தங்களது கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடந்து வந்தது, அங்கிருந்தவர்களிடையே பெரும் கவனம் ஈர்த்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீதான அன்பை பறைசாற்றும் வகையில் மகளுக்கு வேடமணிந்து அழைத்து வந்ததாக அப்போது வேட்பாளர் நாபிக் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக 93 வார்டுகளிலும், அதன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வார்டிலும் போட்டியிடுகிறது. திமுக 74 வார்டுகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 வார்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்