Amit Shah: ஒரு ரூபாய் கூட பிரதமர் மோடி ஊழல் செய்யவில்லை.. அனல் பறந்த அமித்ஷாவின் பேச்சு!
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்காக தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும், தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.12 லட்சம் கோடி ஊழல் புரிந்த கட்சிகள் எல்லாம் இந்தியா கூட்டணியில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்காக தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும், தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தீவிர பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என பாஜகவும், அக்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என காங்கிரஸூம் களமிறங்கியுள்ளதால் இந்த முறை மக்களவை தேர்தலில் யார் வெற்றிப் பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதனிடையே பெங்களூரு தெற்கு, வடக்கு, மத்தி, புறநகர், சிக்பள்ளாப்பூர் ஆகிய 5 மக்களவை தொகுதிகளுக்கான பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, “வாக்குப்பதிவுக்கான தேதி நெருங்கி விட்ட நிலையில் பிரதமர் மோடியின் சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரிவிக்கும் பணியை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். குஜராத் முதலமைச்சராகவும், கடந்த 10 ஆண்டுகால பிரதமராக இருந்தபோதிலும் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழவில்லை. ஆனால் ரூ.12 லட்சம் கோடி ஊழல் புரிந்த கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளது.
நான் பிரதமர் மோடியும் சுமார் 40 ஆண்டுகாலம் பணியாற்றி வருகிறேன். அவர் ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் மோடி ஒருநாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை. இந்தியாவில் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்குமான திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். ஆனால் ராகுல் காந்தி கோடை காலம் வந்ததும் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்கிறார். ஊழல் செய்தவர்களை காப்பாற்றவே இந்தியா கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் நன்றாகவே உள்ளது. ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடரும்” என அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மேலும் படிக்க: தாமரைக்கு தரும் வாக்கு! தமிழ்நாடு பெறும் தனி செல்வாக்கு! - டாக்டர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பு!