EPS Speech: "மகளிர் உரிமைதொகை திட்டம் நிறைவேறுவதற்கு அதிமுக தான் காரணம்" -எடப்பாடி பழனிசாமி
சுவர் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமைத்தொகையை நிறுத்துவதாக மிரட்டுவதா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "எடப்பாடி தொகுதி என்றால் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கிறீர்கள், எடப்பாடி தொகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் பார்க்கிறேன் என்றார். தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து, எல்லா இடத்திலும் எடப்பாடி என்று தான் எழுதியுள்ளனர். ஒரு சில இடங்களில் தான் எனது பெயர் எழுதி உள்ளனர். அப்படி என்றால் அந்த பதவிக்கு சொந்தக்காரர்கள் தான் இங்கு வந்துள்ள அனைவரும் நமது வெற்றி உங்களது அனைவரையும் சாரும் எனவும் பேசினார்.
கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர்கள் எடப்பாடி 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். இம்முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். இங்கு சாலை வசதி, மருத்துவ வசதி அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற கொடுத்த தொகுதி எடப்பாடி தொகுதி. தமிழகத்திற்கு முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி தொகுதி உள்ளது. இன்னும் வாய்ப்பு உள்ளது நிறைய செய்யலாம். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். எங்கு பார்த்தாலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி அலை தான் வீசிக் கொண்டிருக்கிறது. 40க்கு 40-ம் நாம் வெற்றி பெறுவோம். நான் போட்டியிடும்போது எனது வெற்றிக்காக உழைத்த அனைவரும் இங்கு உள்ளனர். உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது போதாது. திமுகவை சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு திள்ளு முள்ளு செய்து வாக்குகளை பெற முயற்சி செய்வார்கள். அதை அத்தனையும் நமது நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முறியடித்து நமது வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார். நமது வெற்றி வேட்பாளர் விக்னேஷ் ஒரு இளைஞர் வேகமாக துடிப்பாக செயல்படும் ஆற்றல் கொண்டவர். வாழையடி வாழையாக அதிமுக தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் இளைஞர்களை தேர்ந்தெடுத்து வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற தொகுதி சேலம் நாடாளுமன்ற தொகுதி என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். வாக்காளர்கள் நேரில் சென்று வாக்குகளை கேட்க வேண்டும் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் 86 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. இப்போது 90 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் இதுபோன்று பூத்து கமிட்டி அமைக்கவில்லை. நமது பூத்கமிட்டி தான் தெளிவான அமைப்பு எனவும் கூறினார்.
இங்கு வேளாண்மை, கைத்தறி, நெசவு தொழில் தான் அதிகம். தண்ணீர் இல்லாமல் வேளாண்மையும், மின்சார கட்டண உயர்வால் விசைத்தறியும் அழிந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் நெசவுத் தொழிலுக்கு மானியம் மூலம் கடன் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் இந்த மூன்று தொழில்களும் பாதிக்கப்பட்டு விட்டது. 100 ஏரி நிரப்பும் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். முதல் கட்டமாக 6 ஏரிகள் தொடங்கி வைத்தேன். இந்த திட்டத்தை துரிதமாக செயல்படுத்தி இருந்தால் ஒரே ஆண்டில் முடித்திருக்கலாம். அப்படி முடித்து இருந்தால் மேட்டூர் அணை நிரம்பும்போது ஏரிகள் நிரப்பியிருக்கலாம். ஆனால் இந்த திட்டத்தை முடக்கிவிட்டனர் இந்த திமுக ஆட்சிக்கு தகுந்த பதிலடி தேர்தல் மூலம் கொடுக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்திகள் பரப்பி வருகின்றனர். குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருகின்றனர். பலமுறை இது தொடர்பாக அதிமுக சட்டமன்றத்தில் பேசி 27 மாதங்கள் கழித்து தான் இந்த திட்டத்தை நிறைவேற்றினார்கள். இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு அதிமுக தான் காரணம். அதிமுக இல்லாவிட்டால் இந்த தொகை கிடைத்திருக்காது. உரிமைத்தொகை வாங்குபவர்கள் வீட்டில் சுவர் விளம்பும் எழுதுகின்றனர். எதிர்ப்பு தெரிவித்தால் உதவித்தொகையை நிறுத்தி விடுவோம் என்று கூறுகிறார்கள். அப்படி நிறுத்தினால் அதிமுக விடாது. இதுபோன்ற முறையில் வாக்குகளை பெற வேண்டுமா? அதிமுக இது போன்று நடந்து கொண்டதே இல்லை. ஆனால் திமுக அராஜக ஆட்சி அதிகார பலத்தை காட்டுகிறார்கள் என்றும் கூறினார். மேலும் 1000 ரூபாய் உரிமைதொகை யாராலும் நிறுத்த முடியாது அப்படி நிறுத்தினால் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவார். எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன். தமிழகம் முழுவதும் உள்ள மாதம் ஆயிரம் ரூபாய் பெரும் குடும்பத் தலைவிகள் பயப்படவேண்டாம் யாராவது மிரட்டினால். நமது அதிமுக நிர்வாகிகளிடம் தெரிவியுங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிமுக ஆட்சி இருந்திருந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உடனடியாக கொடுத்து இருப்போம் என்றார்.
520 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. அதில் பத்து சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி திட்டம், இருசக்கர வாகனம் மானியம், தாலிக்கு தங்கம் திட்டம் இது போன்ற திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டது. இதுதான் திமுக ஆட்சியின் மூன்றாண்டு கால சாதனை எனவும் விமர்சனம் செய்தார். அதிமுக ஆட்சியில் இதுபோன்ற நடந்து கொண்டதில்லை நல்ல திட்டங்களை செயல்படுத்தினோம். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறுத்திவிட்டனர். மேலும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் 2500 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். எடப்பாடி தொகுதியை பொருத்தவரைக்கும் இங்குள்ள அனைவரும் வேட்பாளர்கள். அந்த அடிப்படையில் தான் அவர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். சேலம் நாடாளுமன்ற தொகுதி முக்கியமான தொகுதி இன்றைய நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டுகள் உள்ள தமிழர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் எனவும் கூறினார். அதிமுகவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் செல்வகணபதி திமுகவில் போட்டியிடுகிறார். இவர் மட்டுமல்ல பலர் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு சென்றவர்கள் தான் போட்டியிடுகிறார்கள். அடையாளம் காட்டியது அதிமுக பதவி வழங்குவது திமுக என்றும் பேசினார். எனவே அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களுக்கு இந்த தேர்தல் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பேசினார்.