ABP CVoter Opinion Poll Punjab Election 2022: காங்கிரசும் இல்ல...! பா.ஜ.க.வும் இல்ல..! பஞ்சாபில் ஆட்சியை அமைக்கப்போகும் ஆம் ஆத்மி...! ஏபிபி-சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையில் புதிய ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ந் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 117 இடங்களுக்கும் நடைபெறும் வாக்குப்பதிவு வரும் மார்ச் மாதம் 10-ந் தேதி எண்ணப்படுகிறது. பஞ்சாபில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிப்பதற்கு ஆம் ஆத்மி கட்சியும் வலுவாக மோதி வருகிறது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பதற்கான கருத்துக்கணிப்பை ஏபிபி- சி வோட்டர் இணைந்து நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் ஆளுங்கட்சியான சரண்ஜித்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 27 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. இதன்படி 24 முதல் 30 இடங்கள் வரை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகிறது.
சிரோமணி அகாலி தளம் கூட்டணி 23 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது. அதாவது 20 முதல் 26 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகிறது. பஞ்சாபில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வரும் ஆம் ஆத்மி கட்சி 59 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 55 முதல் 63 இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணி 7 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. அதாவது 3 முதல் 11 இடங்கள் வரை பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
டோபா மண்டலம் :
டோபா மண்டலத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. இந்த மண்டலத்தில் காங்கிரஸ் கட்சி 8 இடங்களை அதாவது 6 முதல் 10 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. சிரோமணி அகாலிதள கூட்டணி 6 இடங்களை அதாவது 4 முதல் 8 இடங்களை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 6 இடங்களை அதாவது 4 முதல் 8 இடங்களை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க. கூட்டணி 3 இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
மாஞ்சா மண்டலம் :
மாஞ்சா மண்டலத்தில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களை அதாவது 8 முதல் 12 இடங்களை கைப்பற்றும் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது. சிரோமணி அகாலிதளம் கூட்டணி 6 இடங்களை அதாவது 4 முதல் 8 இடங்களை கைப்பற்றும் என்றும், ஆம் ஆத்மி கட்சி 6 இடங்களை அதாவது 4 முதல் 8 இடங்களை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க. கூட்டணி 4 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
மால்வா மண்டலம் :
மால்வா மண்டலம் ஆம் ஆத்மியின் கோட்டையாக திகழ்கிறது. இந்த மண்டலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் 9 இடங்களை அதாவது 7 முதல் 11 இடங்களையும், சிரோமணி அகாலிதளம் 11 இடங்களை அதாவது 9 முதல் 13 இடங்களை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.
ஆனால். ஆம் ஆத்மி 47 இடங்களை அதாவது 45 முதல் 49 இடங்களை கைப்பற்றும் என்று முடிவுகளில் தெரியவந்துள்ளது. பா.ஜ.க.விற்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்றும், பிற கட்சிக்கு 1 இடம் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. பஞ்சாபில் ஆட்சியை பிடிப்பது யார் என்பதை தீர்மானிப்பதே இந்த மால்வா மண்டலம் ஆகும். இந்த மண்டலத்தில் மட்டும் மொத்தமுள்ள 117 இடங்களில் 69 தொகுதிகள் அடங்கியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் பஞ்சாபில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்