TN Election Result 2021: கடந்த 2 முறையை விட இந்த தேர்தலில் குறைந்தது பெண் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதியில் இம்முறை 12 தொகுதிகளில் மட்டுமே பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இம்முறை மொத்தம் உள்ள 234 தொகுதியில் 12 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இம்முறை நாம் தமிழர் கட்சியில் 50 சதவிகித பெண் வேட்பாளர்கள் களம் கண்டனர். எனினும் அக்கட்சியிலிருந்து ஒருவர் கூட தேர்தலில் வெல்லவில்லை.
இவர்களில் அதிமுக மற்றும் பாஜகவில் தலா 3 பெண்களும், காங்கிரஸ் கட்சியில் ஒரு பெண் வேட்பாளரும், திமுகவில் 5 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்ல உள்ளனர். மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையிலிருந்து 5.12 சதவிகிதமாகும். இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கடந்த மூன்று சட்டமன்றங்களில் இதுவே மிகவும் குறைவான எண்ணிக்கை ஆகும். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 17 பெண் எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அதுவே 2016ல் 21 எம்.எல்.ஏக்களாக உயர்ந்தது. தற்போது 2021ல் இந்த எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 78 பெண் எம்பிக்கள் வெற்றி பெற்றனர். மொத்தமுள்ள 543 எம்பிக்களில் இது 14.36 சதவிகிதமாகும். 1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் கடந்த தேர்தலில் தான் அதிகபட்ச பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பாலின சமத்துவம் குறித்து அரசியல் தலைவர்கள் அதிகம் பேசினாலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தவறி வருகின்றனர். நீண்ட நாட்களாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா கிடப்பில் உள்ளது. ஒவ்வொரு முறையும் மகளிர் தினத்தின் போது அரசியல் தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் யாரும் இந்த மசோதாவை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றில் பெண்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
இம்முறை அதிமுக சார்பில் 3 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் மூவரும் தனித்தொகுதியை சேர்ந்தவர்கள். பாஜக சார்பில் 2 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். எஞ்சியுள்ள இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
1992ஆம் ஆண்டு பஞ்சாயத்து மற்றும் நகராட்சிக்கான அரியலமைப்பு சட்டத்திருத்தத்தில் இந்தத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டது. அந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கழித்தும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. எனவே விரைவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண் வேட்பாளர்களுக்கு 33 சதவிகித இடங்களை ஒத்துகீடு செய்ய வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. பெண்களுக்கான நலன்களையும் மற்றும் அவர்களுக்கான சட்டங்களையும் இயற்ற பெண்கள் அதிகளவில் எம்பிக்களாகவும் எம்.எல்.ஏக்களாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.