(Source: Poll of Polls)
வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு - தலைமைச் செயலர் ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக தகவல்..
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழகத்தில் கோவிட்-19 நோய் தொற்றுப்பரவல் அதிகரித்துவரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதிக அளவில் பரிசோதனைகளை செய்வது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்குவது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்துவது, தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.
கொரோனா பரவல் தீவிரத்தைக் குறைக்க, இரவு பத்து மணிமுதல் அதிகாலை ஐந்து மணிவரையிலான இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாகவும் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. மே 3,5 ,7 , 11,17, 19, 21 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்னதாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடக்கிறது. எனவே, மே 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத் தேர்வு மட்டும் மே 31-ஆம் தேதி நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடைபெறும்" என்று தெரிவித்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ வாரியத்தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பை மத்தியக் கல்வியமைச்சர் வெளியிட்டார். அதில், மே 4 முதல் ஜூன் 14 வரை நடக்கவிருந்த 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என்றும், மே 4 முதல் ஜூன் 14 வரை நடக்கவிருந்த பத்தாம்வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார். எனவே, தமிழகத்திலும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.