TNPSC Exam Results: டிஎன்பிஎஸ்சி 12 வகைத் தேர்வு முடிவுகள் எப்போது?- லேட்டஸ்ட் தகவலை வெளியிட்ட தேர்வாணையம்!
TNPSC Exam Result 2022: டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட 12 வகையான தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற உத்தேசப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி(TNPSC) சார்பில் நடத்தப்பட்ட 12 வகையான தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற உத்தேசப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2, குரூப் 4, ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு உள்ளிட்ட முக்கியத் தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
குரூப் 2 தேர்வு
2022ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் என 5208 காலி இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற்றது. இதற்காகத் தேர்வர்கள் 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட்டன.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தேர்வு முடிவுகள் வெளியாகாமல் தாமதமாகி வந்த நிலையில், தற்போது இந்த மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள்
அதேபோல, குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 200 கேள்விகளுக்கு 3 மணி நேரம் தேர்வு நடத்தப்பட்டது. முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து அப்ஜெக்டிவ் வகையில் கேட்கப்பட்டது. பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்பட்டது. மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்பட்டன.
குரூப் 4 தேர்வில், மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ள நிலையில், 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருந்தது. இந்நிலையில், தற்போது டிசம்பர் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு
626 காலி இடங்களுக்கானஒருங்கிணைந்த பொறியியல் எழுத்துத் தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற்றது. ஜூலை 2ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெற்ற நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகின. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் இந்த மாதத்திலேயே வெளியாக உள்ளன.
அதேபோல, கிரேட் 3 நிலை நிர்வாக அலுவலர்களுக்கான குரூப் 7 பி தேர்வு முடிவுகள் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரி, நிலை 4-ஐ உள்ளடக்கிய குரூப் 8 தேர்வு (Executive Officer, Grade-IV included in Group-VIII Services) முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாக உள்ளன.
தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் நிதி சேவைத் துறைக்கான நிதி அதிகாரிகள் தேர்வு (Accounts Officer, Class III included in the Tamil Nadu State Treasuries and Accounts Service) முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளன.
தாமதமாகும் தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்பட்டதில் இருந்து சில மாதங்கள் கழித்தே குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. ஜூன் முதல் வாரம் நடைபெற்ற யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் 20 நாட்களுக்குள் வெளியிடப்பட்டு, தற்போது முதன்மைத் தேர்வுகளும் (mains) நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நான்காவது முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் வேலைவாய்ப்பு மற்றும் அடுத்தகட்டத் தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்குத் திட்டமிட்டிருந்த தேர்வர்கள் கவலையில் உள்ளனர். டிஎன்பிஎஸ்சி விரைந்து தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தேசப் பட்டியலை முழுமையாகக் காண: https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf