அரசின் நலத்திட்டங்களால் என்ன பயன்? : பள்ளிக் கல்வித்துறை மீது அடுக்கடுக்காக குறைகளை அடுக்கும் ஐஃபெட்டோ!
பணி நிரவல், பதவி உயர்வு, தனியார் கட்டிடங்களுக்கு மாற்றம் ஆகிய அறிவிப்புகளை ஆசிரியர்கள் மத்தியில் பரவவிட்டு ஏழை மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கவைக்க முன் வருவது ஏன்? என்று ஐஃபெட்டோ கேட்டுள்ளது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்ப அலையை விட கல்வித்துறையில் அன்றாடம் வெளிவரும் அபாய அறிவிப்புகளினால் ஆசிரியர்கள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்களே!.. இதுகுறித்துக் கல்வித்துறை உணர வேண்டாமா என்று ஐஃபெட்டோ தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ஐஃபெட்டோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டேராடூனில் கனவாசிரியர்கள் முன்னிலையில் ஜூன் 2024 முதல் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவை தவிர வேறு பதிவுகளை எமிஸ் இணையதளத்தில் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்றும், இதற்காக தனியாக 14,000 பேரை நியமிக்க இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சேர்க்கைப் பேரணி, ஆடல், பாடல் மேளதாளங்களுடன் மாணவர்களை பள்ளியில் சேர்த்து வருகிறார்கள். இதுவரை மூன்று லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளதாக அரசு செய்தி வெளியிட்டிருக்கிறது. இது பத்திரிகைகள், ஊடகங்கள் வழியாக செய்தியாகவும் வெளியிட்டுள்ளார்கள்.
மே மாதம் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வெப்ப அலை வீச்சு நாளுக்கு நாள் அதிகமாகி தாக்கி வருகிறது. இந்த நிலைமையில் தொடக்க கல்வித்துறை வாயிலாக 2,236 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நிரவல் செய்யப்பட வேண்டும் என்று இயக்குனர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறவில்லை. முந்தைய அரசும் சரி... தற்போதைய தமிழ்நாடு அரசும் எதுவும் செய்யவுமில்லை... செய்ய முன்வரவுமில்லை. பின்தங்கிய எட்டு மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாகவே இருந்து வருகிறது. அந்தப் பகுதி மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவெல்லாம் அரசுக்கு தெரியாதா?..
முறைப்படி ஆசிரியர்கள் நியமனம் செய்திருந்தால் 12,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசு கணக்குப்படி 5650 இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் 1500 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு அளிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நாம் கடுமையாக எதிர்த்து வருகிறோம்!.. மாநிலத்தில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தி வருகின்ற வேளையில் 2236 ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்படுவது என்பது ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். 10 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் அறவே செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் 2236 ஆசிரியர் உபரிப் பணியிடம் இருப்பதாக அரசு கூறுவது எந்த வகையில் என்று தெரியவில்லை?.
பணி நியமனம் செய்யப்படவில்லை!.. பதவி உயர்வு வழங்கப்படவில்லை!.. மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது!.. இந்த நேரத்தில் பணிநிரவல் அறிவிப்பு அவசியம் தானா?..
இடது பக்கத்தில் இதயம் இருக்கிறது. திராவிட மாடல் அரசு அந்த இதயத்தினை தொட்டு பார்க்க வேண்டாமா?..
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் என திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருவதை இதயம் தொட்டு பாராட்ட முன்வராமல் எவராலும் இருக்க முடியாது!.. ஆனால் பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் தொடர்ந்து அரசுக்கு எதிரான வெறுப்புணர்வில் ஆசிரியர்கள் உச்சம் தொட்டு செல்வதற்கான வாய்ப்புகளைத்தான் உருவாக்கி வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிடும். இந்திய பெருநாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நடைபெறப்போகும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குக் கூட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த ஆட்சியின் மீது தவறியும் கூட வாக்களிக்க முன்வரக்கூடாது என்று திட்டமிட்டு இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்கள் சிலர் செய்து வருகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் எங்களால் நிரூபிக்க முடியும்.
சொன்ன வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை என்ற கோபம் நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்குகளில் பிரதிபலித்திருக்கலாம் என்பதை உணர முடிகிறது. அரசு எதையாவது செய்ய முன் வந்தாலும் செய்யவிடாமல் பார்த்து வருகின்ற அலுவலர்களை இனம் கண்டு முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தீர்வு காண முன் வராததுதான் நமக்கு வேதனை அளிக்கிறது.
60 ஆண்டு காலமாக ஒன்றிய அளவில் இருந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலினை மாநில அளவில் கொண்டு சென்று அரசாணை 243-ஐ வெளியிட்டுள்ளார்கள். சுமார் பத்தாயிரம் பேர் நன்மை அடையக்கூடிய ஒரு அரசாமையினை ஒட்டுமொத்த பெண்ணாசிரியர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகின்ற நிலமையினை உருவாக்கியுள்ளார்கள். ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்கள் நடத்திய போராட்டங்களின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அரசாணை 243 அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனைத்து முன்னுரிமை பட்டியலினையும் தொடக்கக் கல்வி இயக்குனர் வழியாக வெளியிட செய்துள்ளார்.
பதவி உயர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதன் முடிவு தெரியாத போதே இடைநிலை தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலினை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று போர்முனையில் நின்று சொல்வதைப் போல பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆயத்தப்படுத்தி வருகிறார்.
தனியார் மயம் ஆகக்கூடாது என்று நாம் இந்தியா முழுவதும் போராடி வருகிறோம். முற்றிலும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத முன்மைக் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அரசுப்பள்ளி கட்டிடங்களில் மாணவர்களுக்கு இடையூறாக இயங்கி வருமேயானால் அந்த அலுவலகங்களுக்கு மட்டும் தனியார் கட்டிடங்களில் செல்வதற்கு வாய்ப்பளிக்கலாம்.
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பொறுப்பேற்றுதற்குப் பிறகு அரசுப் பள்ளி கட்டிடங்களில் இயங்கி வருகின்ற முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உடனடியாக தனியார் கட்டிடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், அதற்கு ஒரு காலக்கெடுவினையும் கூறி ஆணையிடுகிறார்.
நிதியைப் பற்றி கவலை இல்லை. அத்தனை கட்டிடங்களுக்கும் நான் பெற்றுத் தருகிறேன் என்று சொல்கிறார். நிதியே இல்லை என்று தான் எந்த கோரிக்கைகளையும் செய்ய முன்வராத அரசில்... அடிப்படை வசதியுடன் பள்ளி கட்டிடங்களில் இயங்கி வருகின்ற கட்டிடங்களையும் தனியார் கட்டிடத்திற்கு மாற்றி அதற்குரிய நிதியை நான் பெற்றுத் தருகிறேன் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சொல்கிறார் என்றால்... நிதித்துறையை கூட கலந்தாலோசிக்காமல் இப்படி வெளியிடுவது சரியானதாக இருக்க முடியுமா?... இவர் மாற்றத்திற்கு பிறகு யாரிடம் போய் நாங்கள் நிதியினை பெற்று தனியார் கட்டிடங்களுக்கு தருவது என்று பல முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்கிறார்கள். இதையெல்லாம் ஒரு ஐந்து நிமிடம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாமா?..
பள்ளிக் கல்வித்துறையில் தணிக்கை துறையினை அமலாக்கத் துறையைப் போல ஏவி வருகிறார். பள்ளிகள் வாரியாகச் சென்று 20 ஆண்டுகளுக்கு முன்பு, முன் அனுமதி வாங்காமல் உயர் கல்வி படித்ததற்காகப் பெற்ற ஊக்க ஊதிய உயர்வுக்கு தணிக்கைத் தடை செய்து ஓய்வூதியக் கோப்புகள் அனுப்ப முடியாமல் திணறடித்து வருகிறார்கள். நிதித்துறை ஊதியக்குழு அரசாணை 23, நாள்:-05.05.2014, மற்றும் தெளிவுரையின்படியும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வுநிலை தர ஊதியம் ரூ 5400/- நிர்ணயிக்கப்பட்டு காலம் காலமாக பெற்று வருவதற்கு தணிக்கைத் தடை செய்து ஓய்வூதிய கோப்புகள் அனுப்பப்படவில்லை.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று ஒரு வரியில் போட்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தெளிவுரை கேட்டால் விளக்கம் ஏதும் இல்லாமல் அப்படியே பள்ளிக் கல்வித்துறை செயலாளரால் தணிக்கைத் தடையில் குறிப்பிட்ட அதே வார்த்தையே பதிவாகி வருகிறது.
ஹைடெக் லேப் வழியாக ஒரே இடத்திலிருந்து அத்தனை ஆசிரியர்களையும் கண்காணிக்க முடியும் என்று இணையவழி கூட்டங்களில் பேசி வருகிறார். வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைமை உருவாகாத வரை அரசுப் பள்ளிகளில் என்னதான் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாலும் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டியும், தவிர்த்தும் வருகிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.
குஜராத்தில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை உள்ள பள்ளியில் ஒரே ஆசிரியர் ஒரே வகுப்பறையில் அத்தனை வகுப்பு மாணவர்களையும் சேர்த்து பாடம் நடத்தி வருகிறார் என்று அந்த சட்டப்பேரவை கூட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் ஈராசிரியர், ஓராசிரியர் பள்ளிகள்தான் அதிகம் இயங்கி வருகிறது என்பதை உணர வேண்டும். எழுத்தறிவு இல்லாதவர்களை புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் மே மாதம் உடனடியாக சேர்க்க வேண்டும் என்று வயது வந்தோர் மற்றும் முறை சாரா கல்வி இயக்ககத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்ய வேண்டும்?
சென்னை திரும்பியவுடன் முதலில் பணிநிரவல் அறிவிப்பினை தடுத்து நிறுத்துங்கள்!.. அரசாணை 24- ஐ அமல்படுத்துவதை நிறுத்தி வையுங்கள்!.. டேராடூனில் அறிவித்த எமிஸ் இணையதள அறிவிப்பினை ஜூன் முதல் அமல்படுத்திட விரைவுபடுத்துங்கள்!.. பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், கல்வி நலனும் பெருமைக்குரியதாக அமையும்’’.
இவ்வாறு ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.