VITEEE 2024: விஐடியில் இலவசமாக பொறியியல் படிக்கலாம்; நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- விவரம்!
VIT Entrance Exam 2024: நுழைவுத் தேர்வு ஏப்ரல் 19 முதல் 30 வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மார்ச் 30 கடைசித் தேதி ஆகும். மே 3ஆம் தேதி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
விஐடி எனப்படும் வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் பி.டெக். படிப்பில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேலூரில் முதன்முதலாக 1984ஆம் ஆண்டு வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. 2001-ல் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. சென்னையில் மற்றொரு வளாகம் தொடங்கப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் அமராவதி, மத்தியப்பிரதேசத்தில் போபால் ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.
38 வகையான படிப்புகள்
நிகர்நிலைப் பல்கலைக்கழகமான விஐடியில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் பி.டெக். படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 38 வகையான படிப்புகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. இந்த நிலையில், நுழைவுத் தேர்வில் சிறப்பிடம் பிடிப்பவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களைப் பிடிப்பவர்களுக்கு, கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
நுழைவுத் தேர்வு ஏப்ரல் 19 முதல் 30 வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மார்ச் 30 கடைசித் தேதி ஆகும். மே 3ஆம் தேதி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
விஐடிஇஇஇ- 2024
2024ஆம் ஆண்டுக்கான பொறியியல் இளநிலை பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு விஐடிஇஇஇ- 2024 (VITEEE 2024) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதில் குறைந்தபட்சமாக இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் அல்லது உயிரியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
எனினும் எஸ்சி/ எஸ்டி மாணவர்கள், ஜம்மு, காஷ்மீர், லடாக் மாநில மாணவர்கள், வட கிழக்கு மாநில மாணவர்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாணவர்கள் குறைந்தபட்சமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருந்தால் போதுமானது.
யாரெல்லாம் எழுதலாம்?
ஜூலை 1, 2002 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் நுழைவுத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள். 10ஆம் வகுப்பு சான்றிதழில் இருக்கும் தேதியே அதிகாரபூர்வமானதாகக் கருதப்படும். கணினி முறையில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடைபெறும். தாங்கள் பெறும் தர வரிசை அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரிகளும் இடங்களும் ஒதுக்கப்படும். கட்டண சலுகைகளும் அளிக்கப்படும்.
1 லட்சம் வரை ரேங்க் பெறும் தேர்வர்களுக்கு வேலூர் மற்றும் சென்னை வளாகத்தில் இடம் கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
நுழைவுத் தேர்வை எழுத விரும்புவோர் https://viteee.vit.ac.in/?utm_source=VJQY2341&utm_campaign=viteee2024 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதில், பெயர், பாலினம், மொபைல் எண், பிறந்த தேதி, இ- மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவிடவும்.
தோன்றும் பக்கத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டிக் கையேட்டை முழுமையாகக் காண https://vit.ac.in/files/VITEEE-2024-information-brochure.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.