Vice chancellors meet: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு: அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளது.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழகத்தில் உள்ள துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்த மாநாடு தள்ளிப்போன நிலையில், இன்று (ஆக.30) கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
21 பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு
தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் 21 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பிற உயர் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள், பாடத்திட்டங்கள் மேம்பாடு, நான் முதல்வன் திட்டம் அமலாக்கம், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மாநில அரசு அமைந்த பிறகு, ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகின்றது. உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. அதே நேரத்தில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல கடந்த மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக வெளிநடப்பு செய்தது. துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க அதிகாரமளிக்கும் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட மசோதா மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருப்பதாகவும், துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் ஆட்சிக்கு விரோதமானது என்றும், துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என பூஞ்சி ஆணையம் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறினார்.
உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது பேசுபொருளாக அமைந்தது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை பின்பற்றி தமிழ்நாட்டிலும் துணை வேந்தர்களை அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
’கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’ - துணை வேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் சார்பில், தென்மண்டல துணைவேந்தர் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கூட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதையடுத்து காணொலி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, இந்திய உயர் கல்வியின் நோக்கம் அனைவருக்கும் வேலை தரும் கல்வி அவசியம். மார்ச் 1ஆம் தேதி முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைகழகத் துணை வேந்தர்கள் அறிவியல் பூர்வமான சிந்தனையை மாணவர் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிற்போக்கு கருத்துகளை புகுத்த முயற்சிக்கின்றது. கல்வி என்பது மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பல்கலைகழகங்கள் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.