CUET Exam 2023: மே, ஜூனில் க்யூட் நுழைவுத் தேர்வு- அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்த என்.டி.ஏ.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு தேதியை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
க்யூட் நுழைவுத்தேர்வு:
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது தேர்வு தேதியை யுசிஜி வெளியிட்டுள்ளது. அதன்படி இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Application process for #CUET-UG 2023 is likely to be started in the first week of February 2023.
— NANJUNDAPPA K C (@nanjundappa_c) December 21, 2022
The examination will be conducted between the 21st and 31st of May 2023. pic.twitter.com/JDGjYAvftZ
இளநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூன் 3 ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூலையிலும் வெளியிட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யுஜிசி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
க்யூட் தேர்வு: 3 பிரிவுகளாகக் கேள்விகள்
பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும்.
இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம்.
2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.
3ஆவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகள் இந்தப் பிரிவில் கேட்கப்படும்.