Education Secretary: நியமிக்கப்பட்ட 17 நாட்களில் கல்வித்துறை செயலாளர் ட்ரான்ஸ்ஃபர் - ஏன்? யார் இந்த தீப்தி கவுர்?
Education Secretary: மத்திய கல்வித்துறையின் செயலாளராக 17 நாட்களுக்கு முன்பாக நியமிக்கப்பட்ட நரேஷ் பால் கங்வார் அந்த பதவியில் இருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

Education Secretary: மத்திய கல்வித்துறையின் புதிய செயலாளராக தீப்தி கவுர் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய கல்வி செயலாளர் 17 நாட்களில் மாற்றம்:
நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பிரகலாத் ஜோஷி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அமைச்சரை தொடர்ந்து கல்வி அமைச்சகத்திற்கு வெறும் 17 நாட்களுக்கு முன்பே நியமிக்கப்பட்ட செயலாளரும் தற்போது மாற்றப்பட்டுள்ளார். அதன்படி, மத்தியப் பிரதேச கேடரைச் சேர்ந்த 1993-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கவுர் முகர்ஜி புதிய கல்விச் செயலாளராக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் பால் கங்வார் உயர்கல்விச் செயலாளராக மூன்று வாரங்களுக்கு முன்பு தான் நியமிக்கப்பட்டார். பின்பு அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
நிறுத்திவைக்கப்பட்டது ஏன்?
தேசிய தோட்டக்கலை வாரியத் திட்டத்தின் கீழ், வணிக ரீதியான வெள்ளரிக்காய் சாகுபடிக்காக நரேஷ் பால் கங்க்வார் குடும்பத்தினர் இதற்கு முன்னர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான அரசு தோட்டக்கலை மானியத்தைப் பெற்றிருந்ததால், அவரது நியமனம் சமூக ஊடகங்களில் பொதுமக்களிடையே பேசுபொருளானது. அவர் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறையின் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னரே அந்த மானியத்தின் கடைசித் தவணை விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், அவரது நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வந்தது.
யார் இந்த தீப்தி கவுர் முகர்ஜி?
- 1993ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி தீப்தி கவுர் முகர்ஜி. இவர் இதற்கு முன்னர் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்
- இவர் மத்திய அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
- மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்
- தேசிய சுகாதார ஆணையத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
மற்ற அதிகாரிகளின் பணியிடமாற்றம்:
பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “கடந்த மாதம் பஞ்சாயத்து ராஜ் செயலாளராக வினீத் ஜோஷி நியமிக்கப்பட்ட பிறகு காலியான இடத்தை தீப்தி கவுர் முகர்ஜி நிரப்பியுள்ளார். முகர்ஜி தற்போது நிறுவன விவகாரங்கள் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இதுபோக இளைஞர் விவகாரங்கள் செயலாளர் பல்லவி ஜெயின் கோவில் புதிய நிறுவன விவகாரங்கள் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அமைச்சரவைச் செயலகத்தின் சிறப்புப் பணி அதிகாரியான சுஷில் குமார் லோஹானி, இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் (IWAI) தலைவராகவும், தற்போதைய IWAI தலைவரான சுனில் பாலிவால், புதிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய செயலாளர் வி.எல்.காந்த ராவிற்குப் பதிலாக, அசாம்-மேகாலயா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அர்ச்சனா வர்மாவை நீர்வளங்கள் மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறையின் புதிய செயலாளராக அரசு நியமித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















