RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
RBI Loan Recovery: வங்கிக் கடனை வசூலிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

RBI Loan Recovery: வங்கிக் கடனை வசூலிப்பதற்காக இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்பு கொள்வது போன்றவற்றிற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
கடனை வசூலிக்க வங்கிகளுக்கான வழிமுறைகள்:
இந்திய ரிசர்வ் வங்கி, கடன் வசூலை முற்றிலும் வெளிப்படையானதாகவும், கடன் வாங்கியவர்களுக்கு உகந்ததாகவும் மாற்றும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1, 2027 முதல் அமலுக்கு வரும் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், வங்கிகள் மற்றும் வசூல் முகவர்கள் கடன் வாங்கியவர்களைத் தொடர்புகொள்வது, வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் கடன் வசூலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றை நிர்வகிக்கும் கடுமையான விதிகளை கொண்டுள்ளன. கடன் வாங்கியவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தலைத் தடுக்கும் வகையிலும், அதே சமயம் மீட்பு நடைமுறைகள் நியாயமாகவும் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் புதிய விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இரவில் தொலைபேசி அழைப்புகள் கூடாது..!
புதிய விதிகளின்படி, வங்கிகளும் மீட்பு முகவர்களும் வழக்கமாக காலை 8:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். கடன் வாங்குபவர் குறிப்பாகக் கோரியிருந்தாலோ அல்லது அனுமதி அளித்திருந்தாலோ மட்டுமே, இந்த நேரங்களை தாண்டி அழைப்பதோ அல்லது சந்திப்பதோ அனுமதிக்கப்படும். மருத்துவ அவசர நிலைகள், குடும்பத்தில் துக்கம் மற்றும் திருமண விழாக்கள் போன்ற உணர்திறன் மிக்க தனிப்பட்ட சூழ்நிலைகளின் போது கடன் வாங்கியவர்களைத் தொடர்புகொள்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிரட்டுவது கூடாது..!
மீட்பு முகவர்கள் அச்சுறுத்துவது, இழிவான அல்லது மிரட்டும் நடத்தையைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கடுமையாக எச்சரித்துள்ளது. அதன்படி,
- அடையாளம் தெரியாத அல்லது மிரட்டும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது
- கடன் வாங்குபவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்களைத் திரும்பத் திரும்ப தொலைபேசியில் அழைப்பது
- கடன் வாங்கியவர்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்துதல்
- குடும்ப உறுப்பினர்கள், சொத்துக்கள் அல்லது நற்பெயருக்கு அச்சுறுத்தல் விடுப்பது
- கடன் வாங்குபவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் அல்லது ஒலிப்பதிவுகளைப் பகிர்வதன் மூலம் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நினைத்த நேரத்தில் வீட்டிற்கு செல்லக்கூடாது
இந்திய ரிசர்வ் வங்கி, நேரடியாக வீட்டிற்கு சென்று பணம் வசூலிப்பதிலும் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது. அதன்படி, வீட்டிற்கு வருவது குறித்து கடன் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும். வங்கிகள், நியமிக்கப்பட்ட மீட்பு முகமையின் பெயரையும் விவரங்களையும் வெளியிட வேண்டும்.
மீட்பு முகவர்கள் பயனர்களின் வீட்டிற்கு வரும்போது அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, அங்கீகாரக் கடிதம், தொடர்புடைய மீட்பு அறிவிப்பு ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். மேலும் மீட்பு முகமை மற்றும் வங்கியின் குறைதீர்ப்பு அதிகாரி ஆகிய இருவரின் தொடர்பு விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும். கடன் வாங்குபவர்கள் தங்களுக்கு விருப்பமான சந்திப்பு இடத்தை தேர்வு செய்யலாம். எந்த விருப்பமும் தெரிவிக்கப்படாவிட்டால் அல்லது கடன் வாங்குபவர் மீண்டும் மீண்டும் ஆஜராகத் தவறினால், முகவர்கள் கடன் வாங்குபவரின் இல்லம் அல்லது பணியிடத்திற்குச் செல்லலாம்.
பதிவுகள் கட்டாயம்:
பொறுப்புணர்வை வலுப்படுத்தும் வகையில், கடன் வசூல் தொடர்பான தகவல்தொடர்புகளின் பதிவுகளைப் பராமரிக்குமாறு கடன் வழங்குநர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் வாடிக்கையாளர்கள் உடனான் உரையாடல்களைப் பதிவுசெய்து, பின்வரும் விவரங்களைப் பாதுகாக்க வேண்டும்.
- அழைப்பு நேரம்
- பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள்
- மீட்பு தொடர்புகள்
இந்தப் பதிவுகள் பொதுவாகக் குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்குப் பாதுகாக்கப்பட வேண்டும். மூன்றாம் தரப்பு முகமைகள் பணியமர்த்தப்பட்டாலும் கூட, வசூல் நடைமுறைகளுக்கு வங்கிகளே முழுப் பொறுப்பு வகிக்கின்றன என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
கடன் வசூலுக்குத் தேவையான கடன் வாங்குபவரின் தகவல்களை மட்டுமே மீட்பு முகவர்கள் பெற வேண்டும். கடன் வாங்குபவர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























