EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
EPS vs cv Shanmugam : அதிமுக பொதுச்செயலாளரை தொடர்ந்து விமர்சித்து வரும் சி.வி.சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமியை தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. Why is EPS hesitant to remove C.V. Shanmugam from the AIADMK, despite his continued criticism?

தேர்தல் தோல்வி- அதிமுகவில் தொடரும் மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக- அதிமுக- நாம் தமிழர் - தவெக என 4 முனை போட்டியானது உருவானது. இதில் திமுக- அதிமுக இடையேதான் போட்டி இருக்கும் என கருதப்பட்டது. கருத்துக்கணிப்புகள் அப்படியே கூறியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது விஜய் தலைமையிலான தவெக,
அந்த வகையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவிற்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பிக்க அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் திட்டமிட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அதிமுகவில் இரு பிரிவாக எம்எல்ஏக்கள் பிரிந்த நிலையில், தவெக அரசுக்கு எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இபிஎஸ்க்கு எதிராக தனி அணி
இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி அந்த நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்து நடவடிக்கை எடுத்தார். இதனால் இரு தரப்பும் தனி தனி அணியாக செயல்பட்டு வருகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்த்து வருகிறார் சி.வி.சண்முகம், அதிமுகவின் தொடர் தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம் எனவும், கட்சி தலைமை சரியில்லையெனவும் பகிரங்கமாக பேசி வருகிறார்.
நேற்றைய தினம் கூட தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், தோற்றால் கட்சி நிர்வாகிகள் பொறுப்பு, வெற்றி பெற்றால் பொதுச்செயலாளர் தான் காரணமா என கேள்வி எழுப்பினார். இது தான் ஒரு தலைவருக்கு அழகா.? என விமர்சித்தவர், தைரியம் இருந்தால் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுங்கள் என சவால் விடுத்து வருகிறார்.
சி.வி.சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்.?
கட்சியில் பொதுச்செயலாளர் ஒருவரை மீண்டும் மீண்டும் சி.வி.சண்முகம் விமர்சித்து வரும் நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்காமல் எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டி வருவது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சி.வி.சண்முகத்தின் கட்சி பதவியை மட்டும் பறித்த எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து நீக்காமல் உள்ளார்.
இந்த நிலையில் சி.வி.சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்குங்கள் என இபிஎஸ் ஆதரவாளர்கள் அவரிடம் வலியுறுத்தி வருகிறார்கள். கட்சியில் இருந்து சி.வி.சண்முகத்தை நீக்காவிட்டால் தங்களது ஆளுமை மீது நிர்வாகிகளுக்கு கேள்வி எழுப்பும் நிலை உருவாகும் எனவே கட்சியில் இருந்து நீக்குங்கள் அல்லது சஸ்பெண்ட் செய்யுங்கள் என கூறி வருகிறார்கள்.
இபிஎஸ் திட்டம் என்ன.?
ஆனால் கட்சியில் இருந்து சி.வி.சண்முகத்தை நீக்கும் பட்சத்தில் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மேலும் சி.வி.சண்முகமும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாமல் எளிதாக தவெகவில் சேர்ந்து அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம். அப்படி ஒரு வாய்ப்பை எளிதாக சி.வி.சண்முகத்திற்கு வழங்க கூடாது என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இதனை கருத்தில் கொண்டே எடப்பாடி பழனிசாமி சி.வி.சண்முகத்தை நீக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சி.வி.சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்கும் முடிவில் என்ன செய்யலாம் என தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, கடும் குழப்பத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















