UGC NET December 2024: நெட் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆயுர்வேதம்: தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட யுஜிசி!
Ayurveda Biology in UGC NET December 2024: யுஜிசி நெட் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆயுர்வேத உயிரியல் பாடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
டிசம்பர் 2024 முதல் தேர்வர்கள் இந்தப் பாடத்தையும் தேர்வு செய்து எழுதலாம். ஆயுர்வேதத்தின் பழங்கால அறிவியலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராகப் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசியத் தேர்வுகள் முகமை மூலம் இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடக்கும்.
ஆயுர்வேதத்தின் பழங்கால அறிவியலை ஊக்குவிக்கவே..
குறிப்பாக ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் கணினி வழியில் நடத்தப்படும். இந்த நிலையில் புதிதாக ஆயுர்வேத உயிரியல் பாடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 2024 முதல் தேர்வர்கள் இந்தப் பாடத்தையும் தேர்வு செய்து எழுதலாம். ஆயுர்வேதத்தின் பழங்கால அறிவியலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் கூறும்போது, "யுஜிசி நெட் தேர்வில் ஆயுர்வேத உயிரியலை ஒரு தாளாக அறிமுகப்படுத்துவது, ஆயுர்வேதத்தின் சமஸ்கிருத நூல்களை ஆராய ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும். அதேபோல இந்த நூல்களில் உள்ள ஆழமான அறிவை ஒருங்கிணைத்து, சமகால உயிரியல் அறிவியலில் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான முழுமையான மாதிரியை இந்த முன்னெடுப்பு உருவாக்கும்.
ஆயுர்வேத உயிரியல் பாடத்தில் பிஎச்டி படிப்பை முடித்தபிறகு, மாணவர்கள் ஆராய்ச்சி நடத்துவதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு பயிற்சி அளிப்பதற்கும், இந்த முன்னெடுப்பு உதவும். இதன் மூலம் ஆர்வமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர வாய்ப்பு கிடைக்கும்" என்று ஜெகதிஷ் குமார் தெரிவித்தார்.
அலோபதி மருத்துவத்திற்கு மாற்றாக பிரபலமடையும் ஆயுர்வேதம்
மேலும் அவர் கூறும்போது, "தற்போதைய காலகட்டத்தில் இயற்கை மருத்துவத்தின் நன்மைகளைப் பற்றி மக்கள் அதிகம் அறிந்திருப்பதால், அலோபதி மருத்துவத்திற்கு மாற்றாக ஆயுர்வேதம் பிரபலமடைந்து வருகிறது" என்றும் யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.
நவீன சுகாதார அமைப்புகளோடு ஆயுர்வேதம் இணைந்து செயல்படும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே, ஆயுர்வேத உயிரியல் பாடம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
இதன்மூலம் யுஜிசி நெட் தேர்வுக்கான மொத்த பாடங்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. இதில், அரசியல் அறிவியல், தத்துவம், உளவியல், சமூகவியல், வரலாறு, மானுடவியல், வணிகம், கல்வி, இசை, சமூகப்பணி, பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள், வீட்டு அறிவியல், பொது நிர்வாகம், மக்கள் தொடர்பு, பெண்கள் ஆய்வுகள் மற்றும் மக்கள்தொகை ஆய்வுகள் உள்ளிட்ட பாடங்கள் அடங்கும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://ugcnetonline.in/