UGC: 12 இந்திய மொழிகளில் பாட நூல்கள்; ஆசிரியர்களுக்கு யுஜிசி அழைப்பு
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு 12 இந்திய மொழிகளில் இளநிலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து ஆர்வம் மிக்க ஆசிரியர்கள், பாட நூல்களைப் புதிதாக எழுத வேண்டும் என்று யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு 12 இந்திய மொழிகளில் இளநிலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து ஆர்வம் மிக்க ஆசிரியர்கள், பாட நூல்களைப் புதிதாக எழுத வேண்டும் என்று யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. ஆர்வமுள்ள நபர்களும் ஆசிரியர்களும் இதற்கு ஜனவரி 30 வண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் கூறு
மத்திய பாஜக அரசு 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் உள்ள பல்வேறு கூறுகளை அவ்வப்போது மத்திய உயர் கல்வி நிறுவனங்கள் அமல்படுத்தி வருகின்றன. அதன்படி மாநில மொழிகளில் உயர் கல்வி கற்பிக்கப்படும் என்றும் இந்திய மொழிகள் ஊக்குவிக்கப்படும் எனவும் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. யுஜிசி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பல்கலைக்கழக மானியக் குழு, மத்தியக் கல்வி அமைச்சகம், மத்திய அரசு ஆகியவை, கலை, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் படிப்புகளில் பல்வேறு பாடங்களில் இளநிலைப் படிப்புகளை 12 இந்திய மொழிகளில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஆர்வமும் தகுதியும் கொண்ட நபர்களுக்கு அழைப்பு
இதற்காக சரியான, அசலான நூல்களை உருவாக்க ஆசிரியர்களுக்கும் ஆர்வமும் தகுதியும் கொண்ட நபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஆர்வமும் தகுதியும் கொண்ட ஆசிரியர்கள், தங்களின் ஒப்புதலையும் ஆர்வத்தையும் (Expression of Interest) கீழே கொடுக்கப்பட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து, 2024 ஜனவரி 30ஆம் தேதி நள்ளிரவுக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூகுள் படிவ இணைப்பு: https://forms.gle/cABbivfPB6hvfFhB9
முன்னதாக சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 22 இந்திய அட்டவணை மொழிகளில், என்சிஇஆர்டி பள்ளி பாடப் புத்தகங்களை அறிமுகம் செய்தது. தனக்குக் கீழ் செயல்படும் பள்ளிகள் இந்திய மொழிகளில் உள்ள புத்தகங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது.
உயர் கல்வியில் தொடரும் சீர்திருத்தங்கள்
இதேபோல எம்.பில். படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என்று கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
அதேபோல பிஎச்.டி. மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரபல ஆய்விதழ்களில் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை யுஜிசி ரத்து செய்ய முடிவு செய்துள்ளதுது. 75% பிஎச்.டி. மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.