TNPSC Meeting: நாளை மறுநாள் கூடுகிறது டிஎன்பிஎஸ்சி குழு: எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்.!
TNPSC Group 4: இந்த மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் , நாளை மறுநாள் டிஎன்பிஎஸ்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப் பணிகளில் அடிப்படைப் பணிக்கான குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தற்போது வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.
1.33 லட்சம் தேர்வர்கள்:
6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் என்று அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 15.8 லட்சம் பேர் தேர்வை எழுதினர். 2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் ஜூன் 9ஆம் தேதி 7247 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர்.
6,244 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. இதன் மூலம் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலி இடங்களின் எண்ணிக்கை, 6,724 ஆக உயர்ந்தது.
மேலும் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி 2,208 இடங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டன. இதன் மூலம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8932 ஆக அதிகரித்தது.
தேர்வு முடிவுகள்:
அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 2025 ஜனவரி மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் மாதம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள், அக்டோபர் மாதத்திற்குள்ளே முடிவுகள் வெளியாகும் எனவும் தகவல் வெளியானது.
டி.என்.பி.எஸ்.சி கூட்டம்:
மேலும், நாளைமறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அடுத்துவரக்கூடிய தேர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது