TNPSC: படிச்சிட்டீங்களா? நாளை குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு! இத்தனை லட்சம் பேரா எழுதுறாங்க?
தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. சுமார் 7 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
மத்திய அரசு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்துவது போல தமிழ்நாடு அரசும் டி.என்.பி.எஸ.சி. மூலமாக தமிழக அரசின் பதவிகளுக்கு குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது.
நாளை குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு:
அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. கடந்த ஜூன் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து உள்ளனர். குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ-விற்கான முதல்நிலைத் தேர்வு நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்காக 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வை எழுதும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்கனவே ஹால் டிக்கெட் இணையம் மூலமாக வழங்கப்பட்டுவிட்டது. தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட்டுடன் காலை 9 மணிக்கு முன்பாகவே வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வு மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 ஆயிரத்து 327 பணியிடங்கள்:
ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள முறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடவடிக்கைகளை வீடியோவாக எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணை பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் பதவிக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.
குரூப் 2 ஏ பிரிவில் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், உதவியாளர் பணிகளுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது. குரூப் 2 தேர்வில் மொத்தம் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ தேர்வில் மொத்தம் 1820 பணியிடங்களுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கு நாளை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு கடந்த ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. 29 பணியிடங்களுக்கான குரூப் 1 பி, குரூப் 1 சி தேர்வுகள் கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. நாளை குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. மேலும், வரும் டிப்ளமோ, ஐடிஐ அளவிலான 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்ப பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது.