TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
சான்றிதழைப் பதிவேற்றம் செய்யவும் தேர்வு மையத்தைத் தேர்வு செய்யவும் இன்றே (டிசம்பர் 18) கடைசித் தேதி என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் தேர்வு மையத்தைத் தேர்வு செய்யவும் சான்றிதழைப் பதிவேற்றம் செய்யவும் இன்றே கடைசித் தேதி ஆகும்.
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் 2 அளவிலான பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவர்களுக்கு முதல்நிலைத் தேர்வு நடந்து முடிந்து, முடிவுகள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகின. இந்த நிலையில், இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்காக 21,822 பேர் முதன்மைப் பணிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இன்றே கடைசி
இதற்குத் தேர்வர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் தேர்வு மையத்தைத் தேர்வு செய்யவும் சான்றிதழைப் பதிவேற்றம் செய்யவும் இன்றே (டிசம்பர் 18) கடைசித் தேதி என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
— TNPSC (@TNPSC_Office) December 18, 2024
இதற்கு பெரும்பாலான தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி விட்டனர் என்றும் தேர்வுக் கட்டணச் சலுகை கோராத தேர்வர்கள், முதன்மைத் தேர்வுக் கட்டணத்தை செலுத்தவில்லை எனில், அவர்களுக்கு தேர்வெழுத அனுமதிச் சீட்டு வழங்கப்பட மாட்டாது. எனவே தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல், உடனே தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அதேபோல, சான்றிதழைப் பதிவேற்றம் செய்யவும் தேர்வு மையத்தைத் தேர்வு செய்யவும் இன்றே (டிசம்பர் 18) கடைசித் தேதி என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தேர்வு எப்படி?
குரூப் 2 முதன்மைத் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவை வெவ்வேறு நாட்களில் நடக்கின்றன. குறிப்பாக, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முதல் தாள் பிப். 2ஆம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2 தேர்வு இரண்டாம் தாள் பிப்.23ஆம் தேதி முற்பகலில் விரிந்துரைக்கும் வகையில் நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2 ஏ இரண்டாம் தாள் பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்வு கொள்குறி வகையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.