TNPSC Group 1 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு; தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
TNPSC Group 1 Mains: குரூப் 1 மெயின் தேர்வை எழுத உள்ள தேர்வர்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குரூப் 1 மெயின் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் அந்தக் கட்டணத்தைச் செலுத்திய பின்னரே தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிசம்பரில் முதன்மைத் தேர்வு
டிஎன்பிஎஸ்சி 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் குரூப் 1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வை எழுத உள்ளவர்கள், கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். உரிய ஆவணங்களையும் செலுத்த வேண்டும். இதற்கு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் ஐஏஎஸ் கூறி இருப்பதாவது:
’’குரூப்-1 மெயின் தேர்வுக்குத் (Group- I Services) தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு செப்.16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஓடிஆர் மூலம் இதை மேற்கொள்ள வேண்டும்.
கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?
முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள், முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.200-ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதற்கான இணையப் பக்கம் விண்ணப்பத்தைப் பதிவேற்றும் செய்யும் கடைசி நாளுக்கு ஒரு நாள் முன்னதாக மூடப்படும். அதாவது முதன்மைத் தேர்வுக்கான கட்டணத்தை செப்.15-ம் தேதி நள்ளிரவு 11.59-க்குள் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் அந்தக் கட்டணத்தைச் செலுத்திய பின்னரே தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியும்.
விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது
ஒருவேளை டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ள காலக் கெடுவுக்குள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு முதன்மைத் தேர்வை எழுத விருப்பமில்லை எனக் கருதி அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது’’.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.