TNPSC Exam Schedule: டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அட்டவணை 2024 எப்போது?- வெளியான சூப்பர் தகவல்
TNPSC Exam Schedule 2024: டிஎன்பிஎஸ்சியின் 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு அட்டவணை டிசம்பர் 15-ல் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு அட்டவணை டிசம்பர் 15-ம் தேதி அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதில் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது என்றும் 15 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல் கூறப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு நடைபெறுகிறது. பல்வேறு துறைசார் பணிகளுக்கு வெவ்வேறு தேர்வுகள் மூலம், ஆண்டுதோறும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டுக்கான (2024) தேர்வு அட்டவணை, டிசம்பர் 15-ம் தேதி அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது என்றும் 15 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல் கூறப்படுகிறது.
2023 குரூப் 4 தேர்வுகள் எப்போது?
கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான உத்தேச அட்டவணையில், நவம்பர் 2023-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு (TNPSC Group 4 Exam Notification 2023) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படாத நிலையில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மே மாதம் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் 2024 ஜூலை மாதத்தில் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதேபோல 2023ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட, புதிய உத்தேச அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதில், நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படாத நிலையில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற உள்ளது. மே மாதம் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் தாமதம் குறித்துத் தேர்வர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
அமைச்சர் விளக்கம்
இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு, ’’டிஎன்பிஎஸ்சி தேர்வுத்தாள் மதிப்பீட்டில் தாமதம் வரக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது கணிப்பொறி மதிப்பீட்டு ஆய்வகம் அமைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், போர்க்கால அடிப்படையில் இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது’’ என்று விளக்கம் அளித்திருந்தார்.