TNPSC Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 4 உள்ளிட்ட 15 வகைத் தேர்வுகள், முடிவுகள் எப்போது?- முழு அட்டவணை இதோ..!
TNPSC Result Schedule: குரூப் 2, 4 தேர்வு உள்ளிட்ட 15 வகைத் தேர்வுகளுக்கான முடிவு எப்போது வெளியாகும் என்ற கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 2, 4 தேர்வு உள்ளிட்ட 15 வகைத் தேர்வுகளுக்கான முடிவு எப்போது வெளியாகும் என்ற கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள நிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளன.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பல்வேறு நிலைகள் அடங்கிய அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வு முடிவுகளின் இறுதி அட்டவணையை வெளியிட்டது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு போக்குவரத்து சேவைகளின் கீழ், குரூப் 2 நிலையில் வரும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு 2019-ல் தேர்வு நடைபெற்ற நிலையில், ஏப்ரல் 2021-ல் முடிவுகள் வெளியாகின. நீதிமன்ற வழக்கு காரணமாக நேர்காணல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவு எப்போது?
நேர்காணல் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாத குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணியிடங்களுக்காகத் தேர்வர்கள் எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 5,446 இடங்களுக்கான எழுத்துத் தேர்வு மே 21ஆம் தேதி நடைபெற்ற நிலையில், முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 8ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. முதன்மைத் தேர்வு பிப்ரவரி 25ஆம் தேதி நடக்க உள்ளது.
ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகளுக்கான தேர்வுகள் ஜூலை 2ஆம் நடைபெற்ற நிலையில், முடிவுகள் 2023 ஜனவரி மாதம் வெளியாக உள்ளன. குரூப் 7 Bல் கிரேட் 3-ன் கீழ் நிர்வாக அலுவலருக்கான தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடந்ததை அடுத்து, தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 8-ல் கிரேட் 4-ன் கீழ் நிர்வாக அலுவலருக்கான தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடந்ததை அடுத்து, தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள்
ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மூலம் அரசுப் பணிக்குத் தேர்வர்களைத் தேர்ந்தெடுக்கும் குரூப் 4 தேர்வு 7,301 பணியிடங்களுக்காக நடைபெற்றது. எழுத்துத் தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற நிலையில், முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாக உள்ளன.
சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின்கீழ் பெண் தேர்வர்களுக்கான உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு நவம்பர் மாதம் தேர்வு நடைபெற்ற நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியல் நேற்று வெளியானது.
நில அளவையளர் மற்றும் டிராஃப்ட்ஸ்மேன் பணிக்கான 1089 காலி இடங்களுக்கு நவம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
குரூப் 1 தேர்வு முடிவுகள்
துணை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய குரூப் 1 பணியிடங்களுக்காகத் தேர்வர்கள் எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 92 இடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 5ஏ தேர்வுகளுக்கான தலைமைச் செயலக சேவைக்கான உதவி பகுதி அலுவலர் தேர்வு 2023 ஏப்ரலில் நடைபெற்று, அதே மாதத்தில் முடிவுகள் வெளியாக உள்ளன. ஆங்கில மற்றும் தமிழ் செய்தியாளர் பணியிடங்களுக்கான தேர்வு 2023 பிப்ரவரியில் நடைபெற்று, அதே மாதத்தில் முடிவுகள் வெளியாக உள்ளன.
தமிழ்நாடு சிறை சேவையின்கீழ் 8 ஆண் மற்றும் பெண் ஜெயிலர்களுக்கான தேர்வு 2023 பிப்ரவரியில் நடைபெற்று, அதே மாதத்தில் முடிவுகள் வெளியாக உள்ளன.
முழுமையான விவரங்களை அறிய: https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf