TN Schools Reopen 2025: திட்டமிட்டபடி ஜூன் 2 பள்ளிகள் திறப்பு; இதெல்லாம் செய்யணும்; இதற்கு நோ- முக்கிய நெறிமுறைகள் வெளியீடு
TN Schools Reopen 2025: பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பிறகு ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது:
2025- 26ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 2ஆம் தேதி (02.06.2025) அன்று பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட நாளில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2025-26ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜுன் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இக்கல்வியாண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்விசார் செயல்பாடுகள், கல்விசாராச் செயல்பாடுகள் குறித்துப் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றிச் செயல்பட அனைத்துக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பள்ளிகளில் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகங்கள், கழிப்பறைகள், வெளிப்புறங்கள், கட்டிடங்கள், சுவர்களின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர் சேர்க்கை
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்வதை சோதிக்க வேண்டும்.
போலவே பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்கள் ஆகியவற்றையும் ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி வழங்கப்பட வேண்டும்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் காலை உணவு குறித்த நேரத்திற்கு வழங்கப்படுவதைத் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
நன்னெறி வகுப்பு
திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாவில் உள்ள 105 அதிகாரங்களை உள்ளடக்கி 6 வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் ஒரு நன்னெறி வகுப்பு அனைத்து வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பாட வேளைகளில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருக்குறளினைப் பொருளுடன் ஆசிரியர்கள் கற்பித்தல் வேண்டும்.
கல்விசார் செயல்பாடுகள் மற்றும் கல்விசாராச் செயல்பாடுகள்
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கென கற்றல் கற்பித்தல் முறைகளில் நாட்டிற்கே முன்னோடி திட்டங்களான எண்ணும் எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி, மாதிரிப்பள்ளிகள் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கல்விசார் செயல்பாடுகள் (Co-Curriuclar) மற்றும் கல்விசாராச் செயல்பாடுகளைச் (Extra Curriuclar) சிறப்பாகச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளது. அதைத் தொடர வேண்டும்.





















