விடைத்தாள் திருத்தம்; விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை- இதற்குத்தானா?
கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18ஆம் தேதியும், ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 20ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளன. இதற்கு இடைப்பட்ட ஏப்ரல் 19ஆம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெற உள்ளது.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. மார்ச் 25ஆம் தேதி அன்று தேர்வு நடந்து முடிந்தது. கடைசி நாளான மார்ச் 25-ல் இயற்பியல் மற்றும் பொருளாதார பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு மையங்கள் தயார் படுத்தி வைக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 3,316 மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து ஏப்ரல் 4-ல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
ஏப்ரல் 19ஆம் தேதி அன்று விடுமுறை
இந்த நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறி உள்ளதாவது:
''தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18ஆம் தேதியும், ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 20ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளன. இதற்கு இடைப்பட்ட ஏப்ரல் 19ஆம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெற உள்ளது.
இதனால் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது. இதை உணர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
எதற்கு இந்த விடுமுறை?
இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். மேலும், மற்ற ஆசிரியர்களுக்கும் தொடர் பணிகளுக்கு இடையே சிறு ஓய்வு கிடைக்கும். அவை அடுத்து வரும் நாட்களில் ஆசிரியர்கள் புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதற்கு வழிவகுக்கும்.
எனவே, ஏப்ரல் 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்''.
இவ்வாறு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

