TN 11th Result 2022: கணினிப் பயன்பாடுகளில் அதிக சென்டம்; எந்தப் பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு?
கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் அதிகபட்சமாக 2186 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் அதிகபட்சமாக 2186 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, கணக்குப் பதிவியல் பாடத்தில் 2163 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகின. இதில் மொத்தம் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பில் 84.86% மாணவர்களும் 94.99% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 10.13% பேர் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2022ஆம் கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை மொத்தமாக 8,43,675 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 7,59,856 பேர் அதாவது 90.07 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறிப்பாகத் தேர்வை 4,33,319 மாணவிகளும் 4,10,355 மாணவர்களும் எழுதினர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வை எழுதி இருந்தார். இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2021ஆம் கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதற்கு முன்பு, கடந்த 2020ஆம் ஆண்டில் 8,15,442 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7,83,160 ஆகும். இதன்மூலம் தேர்ச்சி வீதம் 96.04 ஆக இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளனர்.
ஒரே பாடத்தில் அதிகபட்சமாக 2,186 பேர் சென்டம்
இந்த நிலையில் கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் அதிகபட்சமாக 2186 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, கணக்குப் பதிவியல் பாடத்தில் 2163 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 873 பேரும், வணிகவியலில் 821 பேரும் கணிதத்தில் 815 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்
முன்னதாக 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்தது. அந்த வகையில் பிளஸ் 1 தேர்விலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் மொத்தம் 95.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 93.60% மாணவர்களும் 97.62% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 80.02% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 70.63% மாணவர்களும், 88.85 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
எந்தெந்தப் பள்ளிகளில் எவ்வளவு தேர்ச்சி?
அரசுப் பள்ளிகளில் 83.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 91.65 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 99.35 % பேரும் இருபாலர் பள்ளிகளில் 90.44 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். பெண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 94.90 ஆக உள்ளது. ஆண்கள் பள்ளி தேர்ச்சி விகிதம் 78 ஆகக் குறைந்துள்ளது.