மே 13 முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்; மே 15 முதல் விடைத்தாள் நகல்- பெறுவது எப்படி?- முழுமையான வழிகாட்டல்!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மே 15 முதல் விடைத்தாள் நகல் பெறலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மே 15 முதல் விடைத்தாள் நகல் பெறலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.
மாணவர்கள் 13.05.2024 முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து தற்காலிக மதிப்பெண்சான்றிதழ்களைப் பெறலாம். அனைத்து மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID, PASSWORD-ஐக் கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண்சான்றிதழ்களை (Provisional Certificate) பதிவிறக்கம் செய்து, அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத்13.05.2024 அன்று முதலே மாணவர்களுக்கு வழங்கலாம். அல்லது மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எப்படி?
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification பகுதியில் சென்று SSLC March/April-2024 - Provisional Certificate பக்கத்தில் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், உரிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் Notification பகுதியில் சென்று SSLC March/April - 2024 - Provisional Certificate பக்கத்தில் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு தேர்வர்கள் - விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும் முறை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரும் மாணவர்கள் முதலில் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்து பெற்ற விடைத்தாள் நகலை மாணவர்கள் ஆய்வு செய்து, பின்னர் இத்துறையால் அறிவிக்கப்படும் நாட்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 15.05.2024 ( புதன்கிழமை) காலை 11.00 மணி முதல் 20.05.2024 ( திங்கட்கிழமை) மாலை 5.00 மணி (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு scan copy-க்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்.
விடைத்தாள் நகல் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை :
விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.