குடிக்க தண்ணீர் கூட இல்லை சார்’; வீதிக்கு வந்து போராடிய மாணவர்கள், பெற்றோர்கள்..!
எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத வேறு பள்ளிக்கு மாணவர்களை மாற்றக்கூடாது. தேவையான வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டம்.
மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் மாநகராட்சி தொடக்க பள்ளி மாணவர்களை மாற்று இடத்திற்கு மாற்றியதை கண்டித்து 2வது நாளாக குழந்தைகளுடன் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
நெல்லை டவுண் பகுதியில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12 வகுப்பு வரை சுமார் 5000 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது. இந்தநிலையில் இந்த பள்ளியோடு இணைந்த மாநகராட்சி தொடக்கப்பள்ளி இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. மேல்நிலை பள்ளி தரம் சிறப்பாக இருப்பதாலும் தொடக்க பள்ளியில் பயிற்றுவிப்பு வரவேற்கும் விதமாக இருப்பதாலும் ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் ஆங்கிலத்தில் கல்வி பயிலும் வகையில் இப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் 572 மாணவ, மாணவிகள் இதில் பயின்று வருகின்றனர். 10 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகள் அருகில் உள்ள பாரதியார் பள்ளிக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஆசிரியர்கள் 4 பேர் அங்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கின்றனர். போதுமான அடிப்படை வசதிகள் பாரதியார் பள்ளியில் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே மாநகராட்சி தொடக்கப்பள்ளி முன்பு கூடிய பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத வேறு பள்ளிக்கு மாணவர்களை மாற்றக்கூடாது. தேவையான வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பைஜு, காவல்துறை உதவி ஆணையாளர் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் நாட்கள் கடந்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என வலியுறுத்தி மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் தலைமையில் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, திங்கட்கிழமை முதல் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மீண்டும் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மேலும் 10 நாட்களுக்குள் பள்ளியில் கூடுதல் வசதி செய்து தரவும் இடப் பற்றாக் குறை இருப்பின் பள்ளிக்கு அருகிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்கள் அங்கு படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்