திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டமைக்கப்பட்ட மூன்று மாத தினசரி கற்பித்தல் செயல்பாட்டிற்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

திறன் இயக்கத்தின் மூலம் 3 லட்சம் மாணவர்கள் அடிப்படைக் கற்றல் விளைவுகளை அடைந்துள்ளனர். இதன் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தி அதிகரிக்க, வலுப்படுத்தப்பட்ட திறன் இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை மேலும் கூறி உள்ளதாவது:
தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் அடிப்படை கற்றல் விளைவுகளை (Basic Learning Outcome) 3 லட்சம் மாணவர்கள் (திறன் இயக்கத்தில் சிறப்பு பயிற்சி பெற்றவர்களில் 40%) அடைவதன் மூலம் தமிழ்நாடு அரசு தனது முதன்மைக் கற்றல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை இன்று எட்டியுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டமைக்கப்பட்ட மூன்று மாத தினசரி கற்பித்தல் செயல்பாட்டிற்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏன் இந்தச் சாதனை முக்கியமானது?
அடிப்படை கற்றல் விளைவினை அதிகப்படியான மாணவர்கள் அடைந்துள்ளனர் என்பது மாநில அடைவு ஆய்வில் (2025) கண்டறியப்பட்ட கற்றல் இடைவெளியினை நிவர்த்தி செய்ய முன்னெடுக்கப்பட்ட திறன் இயக்கத்தின் முதல் பகுதியின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.
இந்த 3 லட்சம் மாணவர்கள், மாநிலம் முழுவதும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 90 நிமிட கால அளவு கொண்ட திறன் பாடத்திட்டங்கள், மையப்படுத்தப்பட்ட ஆசிரியர் தலைமையிலான பயிற்சி மற்றும் கட்டமைக்கப்பட்ட கல்விக் கண்காணிப்பு ஆகியவற்றின் செயல்திறனை நிரூபித்து, அடிப்படை கற்றல் இடைவெளிகளிலிருந்து அவர்களின் வகுப்பு நிலையினை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துள்ளனர்.
கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் இன்னும் எதிர்பார்த்த அடிப்படை கற்றல் விளைவுகளை எட்டவில்லை என்பதை உணர்ந்து, கற்றல் செயல்பாடுகள் தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்ய, அரசு இரண்டாம் கட்டத்தில் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இரண்டாம் கட்டம்- முக்கிய செயல்பாடுகள்: (அக்டோபர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை)
எதிர்பார்க்கப்படும் கற்றல் விளைவுகளை மாணவர்கள் அடையும் பொருட்டு பின்வருவனவற்றைச் செயல்படுத்த பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
- டிசம்பர் 2025 வரை தினம் ஒரு பாடத்திற்கு 90 நிமிடங்கள் என அடிப்படை கற்றல் விளைவு வகுப்புகளைத் தொடரவேண்டும்.
- டிசம்பர் மாத மாதாந்திர மதிப்பீட்டு முடிவுகளின் அடிப்படையில் அடிப்படை கற்றல் விளைவு அடைந்த மாணவர்களை வகுப்பு நிலை கற்றல் பகுதிக்கு மாற்ற வேண்டும்.
- பிப்ரவரி 2026 இல் விரிவான கடை நிலை (Endline) மதிப்பீட்டிற்குத் தயார் படுத்தவேண்டும்
- திட்டத்தின் இறுதியில் 75% மாணவர்கள் அடிப்படை கற்றல் விளைவினை அடைதல் என்கிற இலக்கினைஅடைதல்.
வலுப்படுத்தப்பட்ட இரண்டாம் பகுதி அனைத்துத் திறன் மாணவர்களுக்கும் தொடர்ச்சியான, கட்டமைக்கப்பட்ட மற்றும் தெளிவான முன்னேற்றப் பாதையை உறுதி செய்கிறது.
ஏன் திறன் இயக்கம்?
மாநில அடைவு ஆய்வு 2025-ன் முடிவுகள் 6 முதல் 9 ஆம் வகுப்புகளில் கணிசமான கற்றல் இடைவெளிகள் இருப்பதை வெளிப்படுத்தியது. இதன் அடிப்படையில், மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆசிரியர் கையேடுகள் மற்றும் மாணவர் பயிற்சி புத்தகங்களை அடிப்படை மற்றும் இன்றிமையாத கற்றல் விளைவுகளின் அடிப்படையில் தயார்படுத்தியது. ஜூலை 2025 இல், மாநில முழுவதும் அடிப்படை மதிப்பீடு நடத்தப்பட்டு 7,46,628 (46%) மாணவர்கள் அடிப்படை கற்றல் விளைவு அடைய பயிற்சி தேவைப்படுபவர்கள் என்று அடையாளம் கண்டது.
பகுதி - 1 - செயல்பாடுகள்: கட்டமைக்கப்பட்ட வகுப்பறை பயிற்சி:
ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரை, திறன் வகுப்புகளை உள்ளடக்கிய கால அட்டவணைகளை கொண்டு பின்வரும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன:
- தினம் 90 நிமிட கால அளவு கொண்ட தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித திறன் வகுப்புகள்
- ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மாதாந்திர மதிப்பீடுகள்
- மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான கல்வி மீளாய்வுக் கூட்டங்கள்
- தரவுகள் அடிப்படையில், ஆசிரியர்களின் கருத்துக்கள் மற்றும் நிர்வாக கண்காணிப்பின் அடிப்படையிலான முன்னெடுப்புகள்
இந்தக் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை திட்டத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக அமைந்தது.
அரசு மற்றும் துறைசார் தொடர் செயல்பாடுகள்:
- இரண்டாம் கட்ட செயல்பாட்டின் தினசரி கண்காணிப்பை மேற்பார்வையிடுதல்
- வகுப்பு நிலை பகுதிகளுக்கு மாணவர்கள் சரியான நேரத்தில் மாறுவதை உறுதி செய்தல்
- தொடர்ச்சியான கல்வி சார்ந்த மீளாய்வு கூட்டங்கள் நடத்தி தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.
- முறையான கள மேற்பார்வையுடன் பள்ளிகளுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் வளங்களை கொண்டு உதவுதல்.
- மாவட்ட அளவிலான செயல்திறனை கண்காணித்துச் சீரான முன்னேற்றத்தை உறுதி செய்தல்.
இந்த முயற்சிகள் மாணவர்கள் அடிப்படை திறன்களை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், தர நிலை திறனை நோக்கி முன்னேறுவதையும் உறுதி செய்கின்றன.
அரசின் உறுதியான நிலைப்பாடு:
அடிப்படை கற்றல் விளைவில் உள்ள இடைவெளிகளை களைவது முதன்மையான பணி என்பதைத் தமிழ் நாடு அரசு உறுதிப்படுத்துகிறது. மேலும், எந்த மாணவர்களும் கல்வியில் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்வதாகத் திறன் இயக்கம் செயல்படுகிறது. நிலையான கண்காணிப்பு, இலக்கு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர் சார்ந்த முன்னெடுப்புகள் மூலம், தமிழ்நாடு முழுவதும் கற்றல் விளைவுகளில் அளவிடக்கூடிய மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கு அரசு உறுதிபூண்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.





















