பெரியார் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 20 ஆவது பட்டமளிப்பு விழா.உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை வகித்து 777 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 20 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். பெரியார் பல்கலைக்கழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறாமல் இருந்த 20 ஆவது பட்டமளிப்பு விழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடந்தது. இதில் தமிழக கவர்னர் ரவி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் டெல்லிக்குச் சென்று விட்டதால் விழாவிற்கு அவர் வர இயலவில்லை.
இதனால் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு முனைவர் பட்டம் பெற்ற 6 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த 575 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை, இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 196 மாணவர்களுக்கு தங்கப்பதக்கத்துடன் என 777 பேருக்கு பட்ட சான்றிதழை வழங்கினார். மேலும் இந்த விழாவில் 2019 - 2020 மற்றும் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றி பேசியபோது, ஒரு மாநிலம் வளர வேண்டுமானால் மொழி வளர வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் என்றால் தமிழில் தேர்வு எழுத வேண்டும் என்று ஆணை பிறப்பித்து உள்ளார். இது தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும். கடந்த கடந்த 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 17ல் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்பதற்காக அப்போதைய முதல்வர் கலைஞரிடம் கேட்டுக் பெற்று வந்த பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கலைஞர் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அது சரியாக செயல்படவில்லை. தற்போதுதான் பல்கலைக்கழக துணைவேந்தர் முயற்சி மேற்கொண்டு அது செயல்பட தொடங்கியுள்ளது. இன்று முனைவர் பட்டம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது. பட்டம் பெறுபவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக உள்ளனர் என்று கூறினார்.
மேலும், இது பெரியார் கண்ட கனவு நிறைவேறி உள்ளதை காட்டுகிறது. 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு' என்ற நிலை இருந்ததை தந்தை பெரியார் மாற்றியுள்ளார். பெண்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காக தான் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்போது அதிக அளவில் பெண்கள் பட்டம் பெற்றுள்ளனர். தமிழக முதல்வரும் பெண்கள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். முன்பு பெண்கள் குறைந்தளவு படித்து வந்தனர். ஆனால் தற்போது பெண்கள் அதிக அளவு படித்து பட்டம் பெறுகிறார்கள். இது தற்போது ஆண்களுக்கான சவாலாக மாறி இருக்கிறது. ஆண்களும் அதிக அளவு படித்து பட்டம் பெற வேண்டும். ஆசிரியர் பெருமக்களும் முழுமையான பயிற்சி பெற்று பாடம் நடத்த வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.