Teachers Protest: முற்றும் போராட்டங்கள்; முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது- சென்னையில் பரபரப்பு!
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் இன்று (டிசம்பர் 26) சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக அரசு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றைக் கோடி, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரம் அடையும் போராட்டங்கள்
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையறை அற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. ஒப்பந்த செவிலியர்களும் 7 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்களும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி, அதாவது சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
அந்த வகையில், எஸ்எஸ்டிஏ எனப்படும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று (டிசம்பர் 26) சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும் பலர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடநூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்த நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர்.
மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் பாடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.






















