TN 12th Result 2022: தஞ்சையில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு..!
தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 2019-ம் ஆண்டை விட இந்தாண்டு பொதுத்தேர்வு சதவீதம் உயர்ந்திருக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 2019-ம் ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 5-ந் தேதி பிளஸ்-2 பொது தேர்வு தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 107 மையங்களில் நடந்த பிளஸ்-2 தேர்வை 12 ஆயிரத்து 686 மாணவர்களும், 14 ஆயிரத்து 620 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 306 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் இன்று காலை பிளஸ்-2 பொது தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 689 மாணவர்களும், 14 ஆயிரத்து 167 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 856 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவீதம் 92.14 ஆகும். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.90 ஆகும். மொத்தம் சராசரியாக 94.69 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவ- மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 91.34, மாநகராட்சிப் பள்ளியில் படித்த மாணவ- மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 85.48 என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றாலும் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது. கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி 2019-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் 91.05 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது இந்த ஆண்டு 94.69 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்று அதை விட கூடுதல் சதவீதம் பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக கீழ்க்கண்ட இணையதளங்கள் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in தேர்வின் முடிவுகளை பெறலாம்.
மேலும், தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் மாணவர்கள் வழங்கிய செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் அனுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்