TN School Orders : ஆசிரியர்கள் ஃபோனுக்கு No.. மாணவர்களை சொந்த வேலைக்கு அனுப்பக்கூடாது.. 77 உத்தரவுகள் என்ன?
ஆசிரியர்கள் வகுப்பில் போன் பேசக்கூடாது. மாணவர்களை சொந்த வேலைக்கு அனுப்பக்கூடாது. மனதை பாதிக்கும் எந்த தண்டனையையும் வழங்கக்கூடாது.
ஆசிரியர்கள் வகுப்பில் போன் பேசக்கூடாது. மாணவர்களை சொந்த வேலைக்கு அனுப்பக்கூடாது. மனதை பாதிக்கும் எந்த தண்டனையையும் வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட 77 உத்தரவுகளைப் பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
வேலூர் மாவட்டப் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் 77 அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* தலைமை ஆசிரியர்கள் / உதவித் தலைமை ஆசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னர் பள்ளிக்கு வர வேண்டும்.
* பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடி கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். உதாரணமாக மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வது / ஆசிரியர்கள் மோதல் / பாலியல் வன்முறை / சத்துணவில் பல்லி விழுதல் / சாலை விபத்து இன்னும் பிற அசம்பாவிதம் நடைபெற்றால் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியின்
பேரில்தான் பத்திரிக்கை செய்தி தர வேண்டும்.
* குடிநீர் / கழிவறை / ஆசிரியர் பற்றாக்குறை / மாணவர்கள் எண்ணிக்கை / ஆசிரியர்கள் காலிப் பணியிட விவரம் எதையும் பத்திரிகையாளர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் தெரிவிக்கக் கூடாது.
* வகுப்பறை பற்றாக்குறையின் காரணமாகவோ அல்லது இதர காரணத்தினாலோ வெளியில் / மரத்தடியில் வகுப்பு நடத்தக் கூடாது. மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவினை தலைமை ஆசிரியரோ அல்லது சிறப்பாசிரியரோ நேரில் ஆய்வு செய்து தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்றும் முட்டை நல்ல முறையில் உள்ளதா என்றும் ஆய்வு செய்த பின்னர் தான் வழங்கப்பட
வேண்டும்.
* பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொலைபேசி மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
* அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இ.மெயில் திறந்து பார்க்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்து இ-மெயில் மூலம் அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் காலை 10.00 மணி முதல் பள்ளி வேளை முடியும் வரை கண்காணிக்கப்பட்டு பார்த்து அதற்குரிய நடவடிக்கைகளை உடன் எடுத்து அன்றே இ.மெயிலில் முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி விட்டு அதன் தகவலை அலுவலக கண்காணிப்பாளர் நேர்முக உதவியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
* தலைமை ஆசிரியர் பள்ளி வளாகம், கழிப்பறை, மற்றும் வகுப்பறை ஆகியன தூய்மையாக உள்ளதா என்பதனை சரிபார்த்து, அதனைப் பராமரிக்க வேண்டும். மேலும், வகுப்பறையில் உள்ள கரும்பலகை பெயிண்ட் அடித்து பயன்படுத்தும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* Work done - Register எல்லா பள்ளிகளிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும். பாடவேளை முடிந்தவுடன், பாடம் போதித்த ஆசிரியர்கள் உடனேயே Work done - Register ல் தாம் நடத்திய பாடத்தை, குறிப்பிட்டு, கையொப்பம் இட வேண்டும். மேலும் ஆசிரியர்கள் எவரேனும் விடுப்பு எடுத்திருந்தால் மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்து (Deputation) அம்மாற்றுப்பணிக்கு செல்லும் ஆசிரியர் Work done - Register ல் தாம் நடத்திய பாடத்தை குறிப்பிட்டு கையொப்பமிட வேண்டும்.
* பள்ளியில் கழிப்பிட வசதி / குடிநீர் வசதி உள்ளதா? அவைகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
* தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வேண்டிய உதவிகளை அப்பகுதியில் வசிக்கும் தொழிலதிபர்கள்/தொண்டு நிறுவனங்கள்/அரசியல் பிரமுகர்கள் - ஆகியோரை சந்தித்து பள்ளிக்கு வேண்டிய உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
* பள்ளிகள் - பொதுமக்கள் உறவு நன்றாக இருக்க வேண்டும்.
* விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கும்போது, உடனுக்குடன் அதற்குரிய இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும்.
* மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக் கூடாது.
* ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு செல்லும் போது, கற்பித்தல் உபகரணங்களுடன் செல்ல வேண்டும்.
* அனைத்து பள்ளிகளிலும் Movement Register பராமரிக்கப்பட வேண்டும். ஆசிரியர் / அலுவலக பணியாளர்கள் பள்ளி வளாகத்தைவிட்டு, வெளியில் சென்றால் இயக்க பதிவேடு (Movement Register)-ல் பதிவு மேற்கொண்ட பிறகுதான் செல்ல அனுமதிக்க வேண்டும்.
* ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது மேனிலை வகுப்பு ஆசிரியர்கள் இல்லாத நிலையில் உயர்நிலை போதிக்கும் (அ) சிறப்பாசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை Engaged ஆக இருக்கச் செய்தல் வேண்டும்.
* கருவூல பணிகளுக்கு ஆசிரியர்களை அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆசிரியரல்லாப் பணியாளர்கள் எவருமே இல்லாத சூழலில் மட்டும் இதற்கு விதிவிலக்கு உண்டு. அலுவலகப் பணிக்கு இளநிலை உதவியாளர் இருக்கும் போது ஆசிரியர்கள் செல்லக்கூடாது.
* தலைமை ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் CL, ML-ல் பதிவு செய்ய வேண்டும்.
* ஆசிரியர்கள் பள்ளியில் வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஆய்வு அலுவலர் பார்வையின்போது செல்போன் பேசிக் கொண்டிருந்தால் அவ்வாசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* பள்ளியில் பயிலும் மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது.
* அனைத்து விலையில்லா நலத் திட்டங்களுக்கும் தனியாக பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் பார்வையின்போது காண்பிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு நலத் திட்டத்திற்கும் ஒரு பொறுப்பாசிரியரை நியமித்து பதிவேடு பராமரிக்க வேண்டும்.
* அனைத்து பள்ளிகளிலும் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகளில் பள்ளி வேலை நேரம் தொடங்கும் போதும் முடியும் போதும் மாணவர்களைச் சாலையை கடக்கும்போது சாலைப் பாதுகாப்புப்படை உதவியுடன் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.
* மாணவர்கள் கைப்பேசியை பள்ளிக்கு கொண்டு வருவதை முழுவதுமான தவிர்த்தல்.
* அனைத்து போட்டிகளிலும் ஒரே மாணவர் பங்கேற்பதை தவிர்த்து பிற மாணவர்களும் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்.
* பழுதான கட்டிடத்தில் மாணவர்களை அமர வைக்கக் கூடாது.இடிக்கப்படும் நிலையில் உள்ள கட்டிடங்கள், மேற்கூரை இல்லாத சுவர்கள் இருந்தால், உடன் முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
* மாணவர்கள் மோதிரம், செயின், கையில் ஒயர் போன்றவைகளை கண்டிப்பாக அணிந்து வரக் கூடாது. மாணவர்கள் அணிந்து கொண்டு வந்தால், அவர்களின் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விபரத்தை தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கடைப்பிடித்து, பள்ளியின் தேர்ச்சி வீதம் அதிகரிக்க பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.