Anna University : “பேராசிரியர் நியமன முறைகேட்டில் யார், யார் உடந்தை” அண்ணா பல்கலை.யிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்..!
”பேராசியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றது நிரூபணமானால், அண்ணா பல்கலைக்கழகத்துடனான இணப்பை தொடர்புடைய இன்ஜினியரிங் கல்லூரிகள் இழக்க நேரிடும்”
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட பேராசியர்களின் நியமனங்களில் மெகா முறைகேடு நடைபெற்றுள்ளதாக வெளியான தகவலையடுத்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி
பேராசிரியர் நியமனத்தில் நடந்தது என்ன..?
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் எராளமான இன்ஜினியரின் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர்கள் அல்லது உதவி பேராசியர்களை நியமிக்க வேண்டும் என்றால், அண்ணா பல்கலைக்கழகத்திடமும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏ.ஐ.சிடி.இயிடமும் ஆவணங்களை சமர்பித்து அனுமதி பெற வேண்டும். அதே மாதிரி, ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் உள்ள இணைப்பையும் புதுப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. அப்படி ஒவ்வொரு ஆண்டும் இதனை சமர்பிக்கும்போது, கல்லூரியின் தரம், உட்கட்டமைப்பு, பணியாளர்கள் விவரங்கள், பேராசியர்கள், உதவி பேராசியர்கள், கற்றல் அல்லாத ஊழியர்கள் உள்ளிட்ட கல்லூரியின் ஒட்டுமொத்த விவரத்தையும் தொடர்புடைய கல்லூரிகள் சமர்பிக்க வேண்டியது கட்டாயம்.
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 100 மேற்பட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் ஒரு கல்லூரி மட்டுமின்றி பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருவதாக பகீர் புகார் எழுந்தது.
10க்கு மேற்பட்ட கல்லூரியில் பணியாற்றும் ஒரே ஒரு பேராசிரியர்
அந்த புகாரை அறப்போர் இயக்கத்தினர் எழுப்பிய நிலையில், இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் உடனடி விசாரணை மேற்கொண்டது. அதில், பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 189 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில், 10க்கு மேற்பட்ட கல்லூரியில் பணியாற்றுவது தெரியவந்தது.
அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்களே போலி ஆவணங்கள் சமர்பித்து, இன்னொரு அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பணியாற்றுவது விசாரணையின்போது தெரியவந்திருக்கிறது. அவர்கள் மீதும் இதனை ஊக்குவித்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக் கழகம் தயாராகி வருகிறது.
அறிக்கை கேட்ட ஆளுநர் – அதிர்ச்சியில் கல்லூரிகள்
இந்நிலையில், இந்த பேராசியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக விரிவான அறிக்கையை தனக்கு சமர்பிக்கும்படி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜூக்கு ஆளுநரும் பல்கலைக்கழக துணை வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாகா தகவல் வெளியாகியுள்ளாது. இதனால், போலியாக ஆவணங்களை சமர்பித்த கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
கல்லூரிகளின் இணைப்பு ரத்தாகுமா ? அதிர்ச்சியில் மாணவர்கள்..!
போலி ஆவணங்கள் சமர்பித்தது உண்மையென்றால், அதன் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற இன்ஜினியரிங் கல்லூரிகளின் இணைப்பு ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. ஆளுநரே இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு இருக்கும் நிலையில், இந்த பிரச்னையின் வீரியம் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக வேந்தர்கள் மாநாடு, ஆய்வு என தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வரும் ஆளுநர் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இந்த கல்லூரி நிர்வாகத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.