Minister Anbil Mahesh: அரசு என்றுமே உங்களைக் கைவிடாது; ஆசிரியர்களுக்கு உறுதிகொடுத்த அமைச்சர் அன்பில்
ஆசிரியர்களுக்கான அரணாக பள்ளிக் கல்வித்துறை இருக்கும். எங்களுடைய ஆசிரியர்கள் யாரையும் கைவிட்டு விடாமல் இருப்போம்- அமைச்சர் அன்பில் மகேஸ்.

ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு என்றைக்குமே கைவிடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அவ்வாறு தேர்ச்சி பெற முடியாதவர்கள், ஆசிரியர் பணியை விட்டு வெளியேறலாம் என்று சில சலுகைகளுடன் விருப்ப ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கலக்கத்தில் ஆசிரியர்கள்
இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாட்டில் அமலான 2012ஆம் ஆண்டுக்கு முன்பு, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், ’’உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் வந்த பிறகு, எங்களுடைய சட்ட அதிகாரிகள் மூலம் இதை அணுக உள்ளோம். ஆசிரியர்களுக்கான அரணாக பள்ளிக் கல்வித்துறை இருக்கும். எங்களுடைய ஆசிரியர்கள் யாரையும் கைவிட்டு விடாமல் இருப்போம். அது சார்ந்து எப்படி ஒட்டுமொத்த அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். அதற்கு என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யக் காத்திருக்கிறோம்.
அரசு என்றைக்குமே உங்களைக் கைவிடாது
ஆசிரியர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சார்ந்து மேல் முறையீட்டுக்குச் செல்வார்கள். இருந்தும் அரசு சார்பில், ஆசிரியர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். அரசு என்றைக்குமே உங்களைக் கைவிடாது’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.






















