Tamil Compulsory: இனி கல்லூரி 2-ம் ஆண்டிலும் தமிழ் பாடம் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு
மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 2-ம் ஆண்டு கல்லூரிப் பாடங்களில் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 2-ம் ஆண்டு கல்லூரிப் பாடங்களில் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாம் ஆண்டு பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
முதலாம் ஆண்டில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட நிலையில், 2-ம் ஆண்டிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும் பல்கலைக்கழகங்களில் அனைத்து வகை இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கும் இரண்டாம் வருடப் பருவத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தினை சேர்த்தல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை உயர் கல்வித் துறையின் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன், அன்னை தெரசா மகளிர் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத் திட்டம் இடம்பெறவில்லை.
எனவே அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றும் பொருட்டு, மேற்கண்ட இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டத்தினை சேர்த்து இனி வரும் பருவத் தேர்வுகளில் தவறாமல் நடைமுறைப்படுத்த ஏதுவாக உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்களும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை அரசுக்கு உடன் அனுப்புமாறும் அனைத்து பல்கலைக்கழகப் பதிவாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.
இவ்வாறு உயர் கல்வித் துறையின் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு இனி வரும் செமஸ்டர் தேர்வுகளில் இருந்து அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
#JUSTIN | 2-ம் ஆண்டு கல்லூரிப் பாடங்களில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் - உயர்கல்வித்துறை https://t.co/wupaoCQKa2 | #University #TNGovt #Colleges pic.twitter.com/Il6JBDHsob
— ABP Nadu (@abpnadu) October 15, 2022
முன்னதாக முதலாம் ஆண்டில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது 2-ம் ஆண்டிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: Tamil Compulsory: இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு