CM Stalin: அடுத்தடுத்து அடித்து தூள் கிளப்பும் அரசுப்பள்ளி மாணவர்கள்: பெருமிதம் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தலைசிநிறந்த நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கான பாராட்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.
சிறிய உதவி கிடைத்தாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கான எண்ணிக்கையில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தலைசிநிறந்த நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கான பாராட்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நிகழ்வில் முதலமைச்சர் பங்கேற்று தலைமையேற்று மாணவர்களுக்கு சான்றிதழும் மடிக்கணினியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ''சிறிய உதவி கிடைத்தாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள். மாணவர்களுக்கு படிப்பு மட்டுமே முழு கவனமாக இருக்க வேண்டும். முன்னோர்களின் உழைப்பால் நமக்குக் கல்வி சாத்தியமாகி உள்ளது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பாதையை திராவிட மாடல் அரசு உருவாக்கி உள்ளது.
அரசு பள்ளி - தனியார் பள்ளிகளும், அரசு கல்லூரி - தனியார் கல்லூரிகளும் நிர்வாக அமைப்பில் வேறுபாடு கொண்டதாக இருக்கலாம். ஆனால் தரத்தில்
அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரே அளவுகோலோடுதான் இயங்கவேண்டும். இந்த நிறுவனங்கள் எல்லோருக்கும் பொதுவான நிறுவனங்களாக இருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட சமச்சீர் நிலையைதான் உருவாக்கி வருகிறோம். நாட்டினுடைய முதன்மைக் கல்வி நிறுவனங்களில் இதுவரைக்கும் நம்முடைய அரசுப் பள்ளி
மாணவர்கள் மிகக் குறைவான அளவில்தான் உயர்கல்விக்காகப் போயிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.
கல்வியிலேயும் இதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய நிலைப்பாடு. அதிலும், உயர் அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக கொண்டுவரப்பட்டதுதான், “அனைவருக்கும் ஐ.ஐ.டி” திட்டம்!
நம்முடைய குழந்தைங்களுக்கு நாட்டினுடைய உயர்கல்வி நிறுவனங்கள் எவை? அதில் நுழைய எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் முறை என்ன? இப்படி பல தகவல்கள் சென்று சேராமல் இருந்தது. இப்போது அந்தப் பாதையை உருவாக்கி இருக்கோம். அதுனால, இன்னைக்கு 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு போகப்போறாங்க. பள்ளிக் கல்வித்துறையோட கடுமையான முயற்சிகளாலதான் இது சாத்தியமாச்சு!
கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களுக்குச் சென்று அரசுப் பள்ளி மாணவர்களோட எண்ணிக்கை 75. இந்த ஆண்டு 225. இது மிகப்பெரிய சாதனை!
அரசுப் பள்ளி மாணவர்களில் கடந்த ஆண்டு ஐ.ஐ.டி.க்கு போனவர் ஒரே ஒருத்தர்தான். ஆனால் இந்த ஆண்டு, 6 பேர் செல்கிறார்கள். கடந்த ஆண்டு தேசிய தொழில்நுட்ப கழகம், இந்திய தகவல் தொழில்நுட்ப கழகங்கள், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றிற்கு சென்றவர்கள் 13 பேர். இந்த ஆண்டு 55 பேர் செல்கிறார்கள்.
National Forensics Science University-க்கு கடந்த கல்வியாண்டில் சென்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 0! ஆனால் இந்த ஆண்டு 6 பேர் தேர்வாகி இருக்கிறார்கள்.
முழு ஸ்காலர்ஷிப்புடன் தைவான் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் படிப்பதற்கு இரண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்.
Indian Maritime University-ல் கடந்த ஆண்டு ஒருவரும் போகாத நிலையில் இந்த ஆண்டு 6 மாணவர்கள் செல்லயிருக்கிறார்கள்.
தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு 4 பேர். இந்த ஆண்டு 9 பேர்.
School of Excellence in Law-ல் கடந்த ஆண்டு ஒருத்தர்தான்; இந்த ஆண்டு 7 பேர்.
National Institute of Fashion Technology-ல் இந்த ஆண்டு 27 பேர் படிக்கப் போகிறார்கள். கடந்த ஆண்டு யாரும் போகவில்லை!
கடந்த ஆண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு 6 பேர் படிக்கப் போனார்கள்; இந்தக் கல்வியாண்டில் 20 பேர் செல்கிறார்கள்.
School of Architecture-க்குத்தான் இந்த ஆண்டு அதிகம் பேர் படிக்கப் போகிறார்கள். கடந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர்தான் அங்கே சென்றார். ஆனால்
இந்த ஆண்டு 69 பேர் போகப் போகிறார்கள்.
IISER-க்கு கடந்த ஆண்டு ஒருவரும் போகாத நிலையில், இந்த ஆண்டு அந்த நிலை மாறி, 10 அரசுப் பள்ளி மாணவர்கள் போகிறார்கள்.
தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு போக முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, இன்றைக்கு நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களும் போக முடியும் என்ற சாதனையை நீங்கள் படைத்திருக்கிறீர்கள். இது மூலமாக அரசுப் பள்ளியுடைய கல்வித் தரம் உயர்ந்திருக்கிறது என்ற உண்மை உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களுக்குள்ள நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களான நீங்களும் நுழையும்போதுதான் சமூக நீதி முழுமையடைகின்றது.
2022-23-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில், 25 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டது. இவையெல்லாம் உண்டு உறைவிடப் பள்ளிகளாக
செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து முதன்மைக் கல்வி நிறுவனங்களுக்குப் செல்வதற்கு விருப்பம் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்தோம்.
இந்தக் கல்வியாண்டில், மேலும் 13 பள்ளிகள் தொடங்கப்பட்டு இன்றைக்கு 38 மாவட்டங்களிலும், மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு இத்தனை மாணவர்கள் முதன்மை கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்கிறார்கள்'' என்று முதல்வர் தெரிவித்தார்.