EPS on Udhayanidhi: நீட்டால் மாணவன் பலி; வாரிசு அமைச்சரின் நீட் ரத்து ரகசியம் எப்போது வெளியாகும்?- ஈபிஎஸ் கேள்வி
வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போதுதான் வெளியில் வரும் என்று எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
![EPS on Udhayanidhi: நீட்டால் மாணவன் பலி; வாரிசு அமைச்சரின் நீட் ரத்து ரகசியம் எப்போது வெளியாகும்?- ஈபிஎஸ் கேள்வி Student victimized by NEET exam; EPS Question on minister Udhayanidhi Stalin EPS on Udhayanidhi: நீட்டால் மாணவன் பலி; வாரிசு அமைச்சரின் நீட் ரத்து ரகசியம் எப்போது வெளியாகும்?- ஈபிஎஸ் கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/17/d11e356b85a91cf11e68f2cbfdb2654d1723889770283332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிலம்ப வேளங்காடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் பெற்றோர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தனுஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட முயற்சிகள் எடுக்கப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்திருந்தது.
நீட் ரத்து ரகசியம் எப்போதுதான் வெளியில் வரும்?
இந்த நிலையில், வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போதுதான் வெளியில் வரும் என்று எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகள்:
''தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மாணவர்களின் ரத்தக் கறைகள்
நீட் ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும் விடியா திமுக முதல்வர், தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெற்று விளம்பரப் பேச்சுகளை நம்பி ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை உணரவேண்டும். 40 எம்பிக்களை வைத்து நாடாளுமன்றத்தில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே?
வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போதுதான் வெளியில் வரும்? இன்னும் எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்? நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் அரசுக்கு கடும் கண்டனம்.
இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்.
மாணவச் செல்வங்களே- உயிர் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனைக் கற்களாக மாற்றப் பாருங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கென்ற ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்''.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)