Kota Suicides: காவு வாங்கும் கோட்டா பயிற்சி மையங்கள்?- இந்த ஆண்டில் மட்டும் 28வது தற்கொலை
பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும்போது அழுத்தம் தாங்காமலும் தற்கொலை செய்து வருவது நடைபெறுகிறது.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஃபோரித் இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்பில் சேர அகில இந்திய அளவில் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெற்ற பிறகும், அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில், நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதேபோல பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும்போது அழுத்தம் தாங்காமலும் தற்கொலை செய்து வருவது நடைபெறுகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள், கோட்டாவில் உள்ள பயற்சி மையங்களில் சேர்ந்து, நுழைவு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வுக்கான முன்னணி பயிற்சி மையங்கள் கோட்டாவில்தான் அதிகளவில் அமைந்துள்ளன. இதற்கிடையில், மன அழுத்தம் காரணமாகவும் தேர்வில் பயற்சி பெற முடியாத காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
28ஆவது தற்கொலை
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஃபோரித் இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கோட்டாவின் வக்ஃப் நகரில் தங்கி நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
இதுகுறித்து காவல்துறை கூறும்போது, ''மாலை 4 மணிக்கு அவரை நண்பர்கள் பார்த்துள்ளனர். அறைக்குச் சென்றவரை இரவு 7 மணி வரை யாரும் பார்க்கவில்லை. அழைப்புகளையும் அவர் ஏற்காததால், நண்பர்கள் அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் ஃபோரித் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறையில் தற்கொலைக் கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கடந்த ஆண்டில் இருந்து ஃபோரித் கோட்டாவில் வசித்து வந்துள்ளார்'' என்று தெரிவித்தனர்.
அதிகரிக்கும் அழுத்தம்
போட்டி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. இவர்களில் சிலர் மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் தற்கொலையை நாடி விடுகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)